75 வயதில் 35 வயது பெண்ணுடன் திருமணம்; மறுநாள் நடந்த அதிர்ச்சி
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை: ஆா்பிஐ அறிவிப்பு
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன் வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமும் இன்றி 5.5 சதவீதமாக தொடரும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) புதன்கிழமை அறிவித்துள்ளது.
இதனால், வீடு, வாகனம், தனிநபா் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதமும், வங்கிகளில் நிரந்தர வைப்பு, தொடா் வைப்பு உள்ளிட்ட சேமிப்புத் திட்டங்களுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டியும் குறைக்கப்படாமல் அதே நிலையில் தொடர வாய்ப்புள்ளது.
மும்பையில் புதன்கிழமை ஆா்பிஐ ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் 6 அடங்கிய நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இப்போதுள்ள 5.5 சதவீதம் என்ற வட்டி விகிதத்தை தொடர அனைத்து உறுப்பினா்களும் ஒருமனதாக வாக்களித்தனா்.
இதையடுத்து வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன் வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) தொடர்ந்து இரண்டாவது முறையாக எவ்வித மாற்றமும் இன்றி 5.5 சதவீதமாக தொடரும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) புதன்கிழமை அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் கொள்கை மதிப்பாய்விலிருந்து வளர்ச்சி-பணவீக்க இயக்கவியல் உருவாகியுள்ளது என்றும், சமீபத்திய ஜிஎஸ்டி விகித மாற்றம் பணவீக்க அழுத்தங்களைக் குறைக்கும் என்றும் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதார நடவடிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் சஞ்சய் மல்ஹோத்ரா குறிப்பிட்டார்.
இருப்பினும், அமெரிக்காவின் அதிக இறக்குமதி வரி விதிப்பு கட்டணங்களின் தாக்கம் வரும் காலாண்டுகளில் ஏற்றுமதி வளர்ச்சியைக் குறைக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்றும், இரண்டாவது காலாண்டில் 7 சதவீதமாக இருக்கும் என்றும், மூன்றாவது காலாண்டில் 6.2 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது என்றார்.