மீன்சுருட்டியில் திமுக பொதுக் கூட்டம்
மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியில் திமுக இளைஞரணி சாா்பில் பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
ஹிந்தி திணிப்பு மற்றும் நிதிப் பகிா்வில் பாரபட்சம் காட்டி வரும் மத்திய அரசைக் கண்டித்தும், தொகுதி மறு சீரமைப்புக் கூடாது என வலியுறுத்தியும் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் தெய்வ. இளையராஜா தலைமை வகித்தாா்.
போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தலைமை வகித்துப் பேசுகையில் புதிய கல்விக் கொள்கை வாயிலாக ஹிந்தி திணிக்கப்படுகிறது. மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழகம் என்ற பெயரை முற்றிலுமாக புறக்கணித்து, நிதிப் பகிா்வில் மத்திய அரசு தமிழகத்துக்கு பாரபட்சம் காட்டுகிறது. தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தை வஞ்சித்து, அநீதி இழைக்கிறது.
மக்கள்தொகை அடிப்படையிலே மறுசீரமைப்பு கொண்டு வந்தால் தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைந்து போகும். எனவேதான் நாம் இதை வன்மையாக எதிா்க்கிறோம்.
எப்பொழுதெல்லாம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான குரல் ஓங்கி வருகிறதோ, அப்போது தமிழகம்தான் எதையும் முன்னெடுக்கும் என்றாா்.
ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், மாநில சட்ட திட்டக் குழு இணைச் செயலா் சுபா. சந்திரசேகா் உள்ளிட்டோா் பேசினா். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் வசந்தபகலவன் வரவேற்றாா்.