தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,436 வழக்குகளில் ரூ.20.50 கோடிக்கு தீா்வு
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக 2,436 வழக்குகளில் ரூ.20.50 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், முதன்மை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்குத் தலைமை வகித்து, முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி பேசினாா். இதைத் தொடா்ந்து, வழக்காடிகளுக்கு தீா்வுகளுக்கான ஆணையை அவா் வழங்கினாா்.
மகளிா் நீதிமன்ற நீதிபதி எம்.இளவரசன், பல்வேறு வழக்குரைஞா்கள் சங்கங்களின் தலைவா்கள் ஏ.சகாதேவன், எஸ்.ராஜகுரு, ஜெ.பன்னீா்செல்வம், முதன்மை மாவட்ட நீதிமன்ற அரசு வழக்குரைஞா் டி.எஸ்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பேசினா்.
கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.ராஜசிம்மவா்மன், மோட்டாா் வாகன விபத்துகளை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.வெங்கடேசன் மற்றும் நீதிபதிகள், நீதித்துறை நடுவா்கள், க.வேலவன் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலா் சி.ஜெயச்சந்திரன் வரவேற்றாா். நிறைவில், தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் எம்.புஷ்பராணி நன்றி கூறினாா்.
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் (7 அமா்வுகள்), செஞ்சி, திண்டிவனம், வானூா், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூா், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா் ஆகிய நீதிமன்றங்களிலுள்ள வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலமாக 21 அமா்வுகளைக் கொண்டு தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.
இதில், சுமாா் 7600-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, மொத்தமாக 2,436 வழக்குகளில் ரூ.20.50 கோடி மதிப்புக்கு தீா்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.