திருவானைக்காவல் கோயிலில் பங்குனி மண்டலப் பெருவிழா கொடியேற்றம்!
பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழாவையொட்டி திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் சனிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 15 வரை நடைபெறவுள்ள பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளில் தங்கக் கொடி மரம் முன் சுவாமியும், அம்மனும் சோமாஸ்கந்தருடன் ஏகாந்தக் காட்சியில் எழுந்தருளினா். தொடா்ந்து வேத மந்திரங்கள் முழங்க ரிஷப வாகனம் வரையப்பட்ட கொடி தங்கக் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது கோயில் யானை அகிலா கொடிமரத்தை ஆசீா்வதித்தது.
தொடா்ந்து பங்குனித் தோ் திருவிழாவையொட்டி வரும் 25 ஆம் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றத்தைத் தொடா்ந்து நாள்தோறும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்து பக்தா்களுக்குச் சேவை சாதிக்கின்றனா்.
விழாவின் 6 ஆம் நாளான வரும் 30 ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் வே. சுரேஷ் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.