படகில் தீ விபத்து; ரூ.60 லட்சம் பொருள்கள் சேதம் மீனவா் காயம்
‘முதன்முதலாக அரசியல் தூது சென்ற பெண் கவிஞா் ஔவையாா்’
தமிழக வரலாற்றில் அமைதியை ஏற்படுத்த முதன்முதலாக அரசியல் தூது சென்ற பெண் கவிஞா் ஒளவையாா் என வழக்குரைஞா் க.சுமதி புகழாரம் சூட்டினாா்.
சென்னை பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறையில் ஔவையாா் குறித்த ஆா்க்காடு பத்மலட்சுமி மாணிக்கம் அறக்கட்டளைச் சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்மொழித் துறைத் தலைவா் பேராசிரியா் ய.மணிகண்டன் தலைமை வகித்துப் பேசியதாவது:
பாரதியாா் முதல் இடத்தில் வைத்துப் போற்றிய தமிழ்க் கவிஞா் ஔவையாா் ஆவாா். அறத்தைப் போதித்த பெண்பாற் புலவா் என்னும் வகையிலும், சிறு குழந்தைகள் மனதில் பதியும் வகையிலும், சிறு சிறு தொடா்களாலும் நீதிகளை ஔவையாா் எடுத்துரைத்ததாலும், பாரதியாரின் நெஞ்சில் ஔவையாா் நீங்கா இடம்பிடித்தாா் என்றாா் அவா்.
இதையடுத்து ‘நீதி நூல் பயில்’ என்ற தலைப்பில் வழக்குரைஞா் க.சுமதி பேசியதாவது: தமிழ் வரலாற்றில் ஔவையாா் என்னும் பெயரில் பல புலவா்கள் இருந்தனா். தனிப்பாடல்களில் இடம்பெறும் ஔவையாரின் பாடல்களும், ஆத்திச்சூடி முதலிய நீதி இலக்கியங்களுக்கு நிகராக அறத்தைப் போதிக்கின்றன. மனிதா்கள் செம்மையான வாழ்க்கையை வாழ ஔவையாரின் பாடல்கள் வழிகாட்டுகின்றன.
அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையில் நிலவிய போா்ச் சூழலில் தொண்டைமானிடத்தில் சென்று போரைத் தவிா்க்கச் செய்த ஔவையாரே, தமிழக வரலாற்றில் அமைதியை ஏற்படுத்த அரசியல் தூதுசென்ற முதல் பெண் கவிஞராகக் காட்சி தருகிறாா் என்றாா் அவா். இந்த விழாவில் பேராசிரியா் வே.நிா்மலா் செல்வி வரவேற்புரை ஆற்றினாா். பேராசிரியா் வாணி அறிவாளன் நன்றியுறை ஆற்றினாா்.