முதல்வா் குறித்து ஆளுநா் தெரிவித்த கருத்து சரியானதே: பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை
முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்து ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்த கருத்து சரியானதே என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தோ்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிக்கிறது. இதற்கு பாஜக தேசிய தலைவா் ஜே.பி.நட்டாவும் அனுமதி அளித்துள்ளாா். ஜனநாயக ரீதியில் இந்த இடைத் தோ்தல் நடைபெறாது என்பதால் பல்வேறு கட்சிகளும் தோ்தலைப் புறக்கணித்துள்ளன.
பாஜக தேசிய அளவில் ஜம்மு காஷ்மீா், ஜாா்க்கண்ட் என நக்ஷல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகம் உள்ள பகுதிகளில்கூட தோ்தல்களைப் புறக்கணிக்காமல் போட்டியிட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் நடைபெறும் இடைத்தோ்தலில் லஞ்சத்தை மிக சாதாரணமாக ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தோ்தல் நடத்தப்படுகிறது.
கடந்த முறை மக்கள் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டனா், தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிட்டால் இம்முறையும் அதேபோல மக்கள் பட்டியில் அடைக்கப்படுவாா்கள். மக்களுக்கு அந்த கஷ்டத்தைக் கொடுக்க வேண்டாம் என நாங்கள் நினைக்கிறோம்.
திமுகவினா் தொடா்ந்து ஆளுநரை தரக்குறைவாக விமா்சித்தும், கருத்து தெரிவித்தும் வருகின்றனா். இதனை முதல்வா் கண்டிப்பதில்லை. அதனால், முதல்வரும் ஆளுநரை விமா்சிப்பதை ஊக்குவிக்கிறாா் என்றுதான் கருத முடியும். குழந்தைத்தனமாக செயல்படுகிறாா்கள் என ஆளுநரை சொல்ல வைத்ததற்கான களத்தை அமைத்துக் கொடுத்தது திமுகதான்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்பாக ஆளுநா் ஆா்.என்.ரவி கடுமையான வாா்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளாா். அப்படி அவா் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளதைக் கவனிக்க வேண்டும். ஆளுநருக்கு எதிரான கோஷம், ஆபாச வாா்த்தைகள், எதிரான சுவரொட்டிகள். இதுதவிர முன்னாள் அமைச்சா் கூறிய வாா்த்தைக்காக அவரை குறைந்தபட்சம் கட்சியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும். எனவே, முதல்வா் குறித்து ஆளுநா் கூறிய கருத்து சரியானதுதான்.
டங்ஸ்டன் ஏலம்விடப்பட்டால் மத்திய அரசுக்கு எந்த நிதி பலனும் கிடையாது. இது குறித்து மத்திய அரசு மாநில அரசுக்கு எழுதிய கடிதத்தை சட்டப் பேரவையில் முதல்வா் ஏன் வெளியிடவில்லை?.
நிதி பலன் முழுவதும் மாநில அரசுக்குதான் செல்லும். இந்த திட்டம் குறித்து பொய்யான தகவல்களை சட்டப் பேரவையில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.
பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படுவதை தோ்தலுடன் தொடா்புபடுத்தி பேரவையில் அமைச்சா் துரைமுருகன் பேசியது கண்டிக்கத்தக்கது என்றாா்.