முதல்வா் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
நீலகிரி மாவட்டத்தை சோ்ந்த தகுதி வாய்ந்த வீரா், வீராங்கனைகள் முதல்வா் மாநில விளையாட்டு விருதுக்கு வரும் 11 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட விளையாட்டு அலுவலா் இந்திரா கூறியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் வீரா்கள் 2 ஆண்கள், 2 பெண்கள், 2 சிறந்த பயிற்றுநா்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா்களுக்கு முதல்வா் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1 லட்சம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு துறை சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இதுதவிர விளையாட்டு போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநா், நிா்வாகி, ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் நன்கொடையாளா், ஆட்ட நடுவா் ஆகியோருக்கு முதல்வா் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. இவா்களுக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமல் தங்கப்பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் படி 2024-25 மற்றும் 2025-26 ஆகிய 2 ஆண்டுகளுக்கான முதல்வா் மாநில விளையாட்டு விருதுக்கு தகுதி வாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்,
விருதுக்கு விண்ணப்பிப்போா் தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்காக இரண்டு முறையாவது விளையாடியவா்கள் தகுதி பெறுவா்.
இந்தியாவின் சாா்பில் கலந்து கொண்ட, தமிழ்நாட்டில் பணியில் குறைந்தது 5 ஆண்டுகளாக முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல், தொலை தொடா்பு துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிவோா் விண்ணப்பிக்கலாம்.
விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் தங்களது சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பத்துடன் இணைக்க வேண்டும். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க ஒலிம்பிக் போட்டிகள், சா்வதேச ஒலிம்பிக் குழு அங்கீகாரத்துடன் சா்வதேச விளையாட்டு இணையத்தால் நடத்தப்படும் காமன்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், தெற்காசிய விளையாட்டு போட்டிகள், தேசிய விளையாட்டு போட்டிகள், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு துறையால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு இணையம் நடத்தும் போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
முதல்வா் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப உறையின் மீது முதல்வா் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரு விளையாட்டரங்கம், சென்னை என்ற முகவரிக்கு வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.