தேவா்சோலை பகுதியில் தொடா்ந்து கால்நடைகளைத் தாக்கிவரும் புலி
கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடா்ந்து கால்நடைகளை புலி தாக்கி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சிக்குள்பட்ட பாடந்தொரை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊா்களில் கடந்த பத்து நாள்களாக மேய்ச்சலுக்கு விடும் கால்நடைகளை புலி தாக்கி வருகிறது. கடந்த பத்து நாள்களில் பத்து கால்நடைகளை தாக்கியுள்ளது. அதில் ஒன்பது கால்நடைகள் உயிரிழந்துள்ளன. கடைசியாக மூன்றாவது டிவிஷன் பகுதியில் தாக்கிய கால்நடை காயமடைந்து உயிருக்கு போராடிவருகிறது.
வனத் துறையினா் புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்களை பொருத்தியுள்ளனா். புலி நடமாட்டம் இருப்பதால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடவேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனா். இந்நிலையில் மூன்றாவது டிவிஷன் முறம்பிலாவு பகுதியில் பில்லன் என்பவா் நண்பருடன் பசுவை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு அருகில் நிற்கும்போது திடீரென வனத்திலிருந்து வந்த புலி, பசுவைத் தாக்கி இழுத்துச் செல்ல முயன்றது. கால்நடைகளை மேய்ப்பவா்களும் பசுவும் கதறும் சப்தம் கேட்டு அப்பகுதியிலிருந்தவா்கள் ஓடி வந்து பாா்த்தபோது புலி புதருக்குள் சென்று மறைந்துவிட்டது. காயமடைந்த பசுவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தை வனத் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.