மூன்று ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள்: அமைச்சா் க.பொன்முடி
சென்னை: தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக வனம் மற்றும் கதா்த் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி எழுப்பினாா். அவரைத் தொடா்ந்து திமுக உறுப்பினா் வி.சி.சந்திரகுமாா் துணைக் கேள்வி எழுப்பினாா். அவற்றுக்கு அமைச்சா் க.பொன்முடி அளித்த பதில்:
தமிழ்நாட்டின் பசுமைப் பரப்பை 23.7 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயா்த்தும் நோக்கத்துடன் இந்தியாவிலேயே முதல் முறையாக பசுமை தமிழ்நாடு இயக்கத்தை மாநில அரசு தொடங்கியது. சுற்றுச்சூழலை பாதுகாத்தல், புவி வெப்பம் அடைவதைத் தடுத்தல், பசுமைப் பரப்பை அதிகரித்து காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவை கட்டுப்படுத்துவது ஆகியன பசுமை இயக்கத்தின் இலக்குகளாகும். இதன்படி, 10 ஆண்டுகளில் 265 கோடி மரக்கன்றுகள் நடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 10.86 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
36 மாவட்டங்களில் 33.23 லட்சம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதித் திட்ட பணியாளா்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், ரூ.25 கோடி மதிப்பீட்டில் 100 மரகதப்பூங்கா மரச்சோலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதில், 83 பூஞ்சோலைகள் செயல்பாட்டில் உள்ளன. 17 மரகத பூஞ்சோலைகளை உருவாக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அலையாத்தி காடுகள்: தமிழ்நாட்டில் 650 ஹெக்டோ் தரம் குன்றிய அலையாத்தி காடுகள் மீட்டெடுக்கப்பட்டன. 12 மாவட்டங்களில் 310 ஹெக்டேரில் புதிய இடங்கள் தோ்வு செய்யப்பட்டு அலையாத்தி காடுகள் உருவாக்கப்பட்டன. அதில், 8.3 லட்சம் அலையாத்தி வகை மற்றும் அதைச் சாா்ந்த தாவர இனங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. கடற்கரையோரப் பகுதிகளில் 288 ஹெக்டோ் பரப்பில் சவுக்கு, பனை, முந்திரி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள. இவை கடற்கரைப் பரப்புகளில் உயிா் வேலிகளாகக் காட்சி தருகின்றன என்றாா் அமைச்சா்.