மெட்ரோ கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி பெங்களூருவில் மஜத ஆர்ப்பாட்டம்
மெட்ரோ ரயில் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறக் கோரி, சுதந்திர பூங்காவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெங்களூரு பிரிவு தலைவர் எச்.எம். ரமேஷ் கௌடா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மெட்ரோ நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன், கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என எச்சரித்தனர்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.ஏ. திப்பேசுவாமி, டி.ஏ.சரவணா மற்றும் பல மூத்த தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் கௌடா கூறியதாவது: மெட்ரோ ரயில் டீசல், பெட்ரோலில் இயங்கவில்லை. மின்சாரத்தில் இயங்குகிறது. ஏற்கெனவே மின்சார கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது.
விதிமுறைகளை மீறியதாக வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!
கட்டண உயர்வு காரணமாக 1.5 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் ஏற்கெனவே மெட்ரோ பயணத்தை கைவிட்டனர். பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முதலில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அது அதன் உண்மையான நோக்கத்தை இழந்து விட்டது என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
மெட்ரோ ரயில் கட்டணத்தை அண்மையில் பெங்களூரு மெட்ரோ நிறுவனம் 46 சதவீதம் வரை உயர்த்தியது. இதனால் மெட்ரோ ரயில்களில் பயணியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதையடுத்து மெட்ரோ ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்தின.
இதைத்தொடர்ந்து, மெட்ரோவில் உயர்த்தப்பட்ட கட்டணத்தில், 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது.