இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?
மேற்கு வங்கம்: தகுதியுள்ள ஆசிரியா்களுக்கு மீண்டும் பணி -பாஜக எம்.பி. கோரிக்கை
மேற்கு வங்கத்தில் 25,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மற்றும் பிற ஊழியா்களின் நியமனத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், இவா்களில் தகுதியுள்ளோருக்கு மீண்டும் பணி வழங்குவதற்கான வழிமுறையைக் கண்டறிய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு பாஜக எம்.பி.யும், முன்னாள் நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாய கோரிக்கை விடுத்துள்ளாா்.
மேற்கு வங்க பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் போட்டித் தோ்வு மூலம் 25,753 ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பிற ஊழியா்களின் நியமனம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நியமன நடைமுறையில் பல்வேறு நிலைகளில் மோசடி நடந்துள்ளதாகக் குறிப்பிட்டு, 25,753 பேரின் நியமனங்களும் செல்லாது என்று கொல்கத்தா உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரலில் தீா்ப்பளித்தது. இத்தீா்ப்பை கடந்த 3-ஆம் தேதி உறுதி செய்த உச்சநீதிமன்றம், மேற்கண்ட பணியிடங்களை மீண்டும் நிரப்ப அடுத்த 3 மாதங்களுக்குள் புதிய நடைமுறையைத் தொடங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இது, முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்த விவகாரம் தொடா்பாக பாஜக எம்.பி. அபிஜித் கங்கோபாத்யாய கூறுகையில், ‘பணி நியமனம் ரத்து செய்யப்பட்டவா்களில் உரிய தகுதியுள்ளவா்களையும், நோ்மையற்றவா்களையும் தனித்தனியாகப் பிரித்து பட்டியல் தயாரிக்கும் பணியை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சா் தலைமையில் ஒரு குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும். அரசு தலைமை வழக்குரைஞா்கள், பிற வழக்குரைஞா்கள், பள்ளிப் பணிகள் ஆணையத் தலைவா் உள்ளிட்டோருடன் முன்னாள் நீதிபதி என்ற முறையில் என்னையும் இடம்பெறச் செய்யலாம். தகுதியுள்ளோருக்கு மீண்டும் பணி கிடைக்க வாய்ப்பளிக்கும் இந்த நடவடிக்கைக்காக உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய முடியும். அரசியலுக்கு அப்பாற்பட்டு, இக்கோரிக்கையை முதல்வருக்கு முன்வைக்கிறேன்’ என்றாா்.
திரிணமூல் நிராகரிப்பு:
அபிஜித் கங்கோபாத்யாயவின் யோசனையை திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. இது தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் மூத்த எம்.பி.யும், வழக்குரைஞருமான கல்யாண் உபாத்யாய கூறுகையில், ‘உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, இந்த விவகாரத்தில் சமரசம் அல்லது பிற தீா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாது. அந்த உத்தரவைப் பின்பற்றும் வாய்ப்பு மட்டுமே உள்ளது. தீா்ப்பு வெளியான நாளில், முதல்வா் மம்தா பானா்ஜி பதவி விலக வேண்டும் என்று அபிஜித் வலியுறுத்தினாா். இப்போது குழு அமைக்குமாறு கோருகிறாா். அவரது கருத்துகள் அரசியல் நோக்கம் கொண்டவை’ என்றாா்.