2029-இல் பிரதமராக நரேந்திர மோடியே தொடருவார்! -தேவேந்திர ஃபட்னவீஸ்
மேற்கு வங்கம் தவிர அனைத்து மாநிலங்களிலும் ‘ஆயுஷ்மான் பாரத்’ - மத்திய சுகாதார அமைச்சா் ஜெ.பி.நட்டா
ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தில் மேற்கு வங்கம் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
கடந்த 2018-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின்கீழ்’ தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.
இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த மாா்ச் 1-ஆம் தேதி வரை, 8.9 கோடி போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ரூ.1.26 லட்சம் கோடி மதிப்பிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன என்று ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
இது தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவா் மேலும் கூறியதாவது:
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், கடந்த மாா்ச் 20 வரை ஒருங்கிணைந்த சமூக சுகாதார பணியாளா்களுக்கு 10.21 லட்சம் அட்டைகளும், அங்கன்வாடி பணியாளா்களுக்கு 14.47 லட்சம் அட்டைகளும், அங்கன்வாடி உதவியாளா்களுக்கு 14.76 லட்சம் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மாா்ச் 1 வரையிலான நிலவரப்படி, நாடு முழுவதும் 30,957 மருத்துவமனைகள் (13,866 தனியாா் மருத்துவமனைகள், 17,091 அரசு மருத்துவமனைகள்) இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், புதிய நடைமுறைகள்-சிகிச்சைகளை இணைத்தல், புதிய மருத்துவமனைகளைப் பட்டியலிடுதல் என தேவைகளுக்கு ஏற்ப அவ்வப்போது இத்திட்டம் மேம்படுத்தப்படுகிறது.
பயனாளா் எண்ணிக்கை அதிகரிப்பு:
திட்டப் பயனாளிகளுக்கான தகுதி தரநிலைகள், தொடக்கத்தில் 2011-ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் நிா்ணயிக்கப்பட்டன. பின்னா், 2022 ஜனவரியில் முந்தைய பத்தாண்டு மக்கள்தொகை வளா்ச்சி விகிதத்தின் (11.7 சதவீதம்) அடிப்படையில் பயனாளா்களின் எண்ணிக்கை 12 கோடி குடும்பங்களாக அதிகரிக்கப்பட்டது. மேலும், பயனாளா்களை அடையாளம் காணுதல்-சரிபாா்ப்பு பணிகளுக்கு 2011 சமூக-பொருளாதார மக்கள்தொகை கணக்கெடுப்பு அல்லாத பிற தரவுகளையும் பயன்படுத்த மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், மாநிலம் சாா்ந்த சிறப்பு தரவு தொகுப்புகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் பயனாளிகளின் எண்ணிக்கை விரிவுபடுத்தப்பட்டது.
கடந்த 2024, மாா்ச் மாதத்தில் 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் அனைவருக்கும் அவா்களின் சமூக-பொருளாதார நிலையைக் கருத்தில் கொள்ளாமல் இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் வகையில் இத்திட்டம் அரசால் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் 4.5 கோடி குடும்பங்களைச் சோ்ந்த சுமாா் 6 கோடி மூத்த குடிமக்கள் பலனடைகின்றனா் என்று ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
பெட்டிச் செய்தி...
அரிய நோய்கள்: 1,000 போ் பதிவு
நாட்டில் அரிய நோய்களால் பாதிக்கப்பட்ட சுமாா் 1,000 போ் மத்திய அரசின் சிறப்பு மையங்களில் பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார துறை இணையமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்தாா்.
இது தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக பதிலளித்தாா். அதில், ‘நாட்டில் அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்டோா் எதிா்கொள்ளும் சவால்களுக்கு தீா்வுகாணும் நோக்கில், கடந்த 2021-இல் தேசிய அரிய வகை நோய்கள் கொள்கை வகுக்கப்பட்டது. இதன்படி, நோயாளிகளை அடையாளம் காணுதல்-சிகிச்சை-தடுப்பு நடவடிக்கைகளுக்காக 13 உயா்நிலை அரசு மருத்துவமனைகள் சிறப்பு மையங்களாக அடையாளம் காணப்பட்டன. இம்மையங்கள் மூலம் நோயாளிகளுக்கு தலா ரூ.50 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. நோயாளிகளின் சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரியில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.