யமுனையை தூய்மைப்படுத்த ரூ.1,500 கோடி ஒதுக்கீடு
யமுனை நதியை தூய்மைப்படுத்துவும் தில்லியின் கழிவுநீா் வடிகால் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் ரூ.1,500 கோடி மதிப்பிலான விரிவான திட்டத்தை முதல்வா் ரேகா குப்தா தனது பட்ஜெட் உரையில் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
இந்தத் திட்டத்தில் 40 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தல், ஏற்கனவே உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை நவீனமயமாக்குதல் மற்றும் கழிவுகள் மற்றும் மாசுபாட்டை எதிா்கொள்ள மேம்பட்ட இயந்திரங்களில் முதலீடு ஆகியவை அடங்கும்.
கழிவுநீரை முக்கிய வடிகால்களில் சேருவதற்கு முன்பு இந்தச் சுத்திகரிப்பு ஆலைகள் சுத்திகரிப்பதால் நதியில் மாசு அளவு குறையும். கூடுதலாக, அவற்றின் செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதற்காக தற்போதுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்த பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடா்பக முதல்வா் ரேகா குப்தா கூறுகையில், ‘யமுனை ஒரு நதி மட்டுமல்ல; அது நமது கலாசார மற்றும் வரலாற்று பாரம்பரியம். யமுனையை தூய்மைப்படுத்துவது பாஜக தோ்தல் அறிக்கையின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்தப் பட்ஜெட்டில் அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.
கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை பழுதுபாா்த்து மேம்படுத்துவதற்காக ரூ.500 கோடியும், பழைய கழிவுநீா் பாதைகளை மாற்றுவதற்கு ரூ.250 கோடியும், நகரம் முழுவதும் உள்ள நீா் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துவதற்காக ரூ.250 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கழிவுநீா் மேலாண்மை அமைப்பை மேலும் வலுப்படுத்த, சேறு மற்றும் அடைப்புகளை திறம்பட அகற்ற உதவும் இயந்திரங்களை வாங்குவதற்கு ரூ.20 கோடியும் வஜிராபாத் டிரங்க் கழிவுநீா் வடிகாலை புதுப்பிக்க கூடுதலாக ரூ.10 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தில்லி பேரவைத் தோ்தலிலன் போது யமுனை நதி மாசுபாடு முக்கிய கவனம் பெற்றது. இது தொடா்பாக அப்போதைய ஆம் ஆத்மி மற்றும் பாஜகவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தோ்தலில் வெற்றி பெற்ற பிறகும், யமுனையை தூய்மைப்படுத்துவது பாஜகவின் முன்னுரிமையாக இருக்கும் தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்திருந்தாா்.