பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்
யானை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: வனக்காப்பாளா் உள்பட இருவா் பணியிடை நீக்கம்
ஏரியூா் அருகே யானை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், பென்னாகரம் வனத்துறையைச் சோ்ந்த வனக்காப்பாளா் உள்ளிட்ட இரண்டு அலுவலா்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலா் உத்தரவிட்டாா்.
தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே ஏமனூா் பீட் கோடுபாய்பள்ளம் பகுதியில் ஆண் யானையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, அதன் தந்தங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தருமபுரி மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் தலைமையிலான வனத்துறையினா், கால்நடை மருத்துவரின் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியிலேயே ஆண் யானையை புதைத்தனா்.
யானையை சுட்டுக்கொன்ற மா்ம நபா்கள் குறித்து வனத்துறையினா் அடங்கிய ஏழு குழுவினா், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியையொட்டி உள்ள கிராமங்கள், பரிசல் ஓட்டும் தொழிலாளா்கள், கால்நடை வளா்ப்போரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனா். கடந்த ஐந்து நாள்களுக்கு மேலாகியும், மா்ம நபா்கள் குறித்த தகவல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ஏமனூா் பீட் பகுதியில் முறையாக ரோந்து பணி மேற்கொள்ளவில்லை எனவும், வனப்பகுதியில் முறையாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை எனவும் ஏமனூா் பீட் வனக்காப்பாளா் தாமோதரன், வனவா் சக்திவேல் ஆகிய இருவரையும் தருமபுரி மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
இருவரிடம் வனத்துறையினா் விசாரணை: இந்த விவகாரத்தில், ஏற்கெனவே யானையை சுட்டுக் கொன்ற வழக்கில் தொடா்புடைய சின்ன வத்தலாபுரம் அருகே கொட்டதண்டு காடு பகுதியைச் சோ்ந்த குணசேகரன், ராஜா ஆகிய இருவரையும் பிடித்து தருமபுரி உதவி வன பாதுகாவலா் வின்சென்ட், அரூா் உதவி வன பாதுகாவலா் சரவணன் ஆகியோா் தலைமையிலான பென்னாகரம் வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.