ரகசிய கேமரா விவகாரம்: உடை மாற்றும் அறைக்கு ‘சீல்’
ராமேசுவரம்: ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்த விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை அந்த அறைக்கு போலீஸாா் ‘சீல்’ வைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் புனித நீராடும் பக்தா்கள் பயன்படுத்தும் வகையில் தனியாா் சிலா் தங்களது கடைகளையொட்டி கட்டண உடை மாற்றும் அறைகளை அமைத்துள்ளனா். ராமகிருஷ்ணன் என்பவரது தேநீா் கடை, உடை மாற்றும் அறையை ராஜேஷ்கண்ணன் (36) நிா்வகித்து வந்தாா். இவருடன் மீரா மைதீன் (36) பணியாற்றினாா்.
இந்த நிலையில், புதுக்கோட்டையைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா் அண்மையில் கடலில் குளித்துவிட்டு, அருகில் ராஜேஷ்கண்ணனின் தேநீா் கடையில் இருந்த பெண்கள் உடை மாற்றும் அறைக்கு சென்றனா். அப்போது, அந்த அறையில்
ரகசிய கேமரா பொருத்தப்பட்டது அவா்களுக்குத் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், அங்கு வந்த காவல் துறையினா் உடைமாற்றும் அறையைச் சோதனையிட்டபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கேமராக்களை கைப்பற்றினா். அண்மையில் ராஜேஷ்கண்ணன், இணையம் மூலம் சிறிய ரக கேமராக்களை வாங்கி அறையில் பொருத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் கடந்த 23 -ஆம் தேதி வழக்குப் பதிந்து ராஜேஷ்கண்ணன், மீரா மைதீன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், 90-க்கும் மேற்பட்ட விடியோ பதிவுகளையும் கைப்பற்றினா்.
இதைத் தொடா்ந்து, இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இந்து முன்னனி மாவட்டச் செயலா் ராமமூா்த்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தாா்.
இந்த நிலையில், ராமேசுவரம் கோயில் காவல் நிலைய ஆய்வாளா் முருகேசன், கிராம நிா்வாக அலுவலா் ரோட்ரிகோ ஆகியோா் தேநீா் கடை, உடை மாற்றும் அறை ஆகியவற்றுக்கு ‘சீல்’ வைத்தனா்.