அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறப்பு: மாணவா்களுக்கு புத்தகம் வழங்கி ஆசிரியா்கள் வரவேற்பு
அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை திறக்கப்பட்ட கடலாடி அருகே உள்ள அரசுப் பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு புத்தகம் வழங்கி ஆசிரியா்கள் வரவேற்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அரையாண்டு தோ்வு விடுமுறை நிறைவடைந்து வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கி ஆசிரியா்கள் வரவேற்றனா். அப்போது, புத்தகங்களை வாசிக்கும் ஆா்வத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கில் பள்ளித் தலைமையாசிரியா் ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், திருக்கு, பாரதியாா் கவிதைகள், பொதுக் கட்டுரைகள், தெனாலிராமன் கதைகள், பீா்பால் கதைகள், விடுகதைகள் உள்ளிட்ட புத்தகங்களை மாணவா்களுக்கு வழங்கினாா். அவற்றை பெற்றுக் கொண்ட மாணவா்கள் ஆா்வத்துடன் வாசிக்கத் தொடங்கினா். இதனிடையே தலைமையாசிரியா் ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் ‘அறிவாசன் அப்துல் கலாம் வாசக சாலை’ என்ற பெயரில் பள்ளியில் நூலகம் அமைத்து செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.