`விசிக எம்.பி-க்கு அம்பேத்கர் விருது' - எதிர்க்கும் தமிழ்ப்புலிகள் கட்சி... சொல்...
புது உறவு தொடக்கம்? - மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸை புகழ்ந்து தள்ளும் சரத் பவார் மகள், உத்தவ் கட்சி
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த சில நாள்களுக்கு முன்பு நக்சலைட்கள் ஆதிக்கம் மிகுந்த கட்சிரோலிக்கு சென்றார். அங்கு 11 நக்சலைட்கள் பட்னாவிஸ் முன்னிலையில் சரணடைந்தனர். இதனை பிரதமர் நரேந்திர மோடி வெகுவாக புகந்து இருந்தார். அதோடு பட்னாவிஸை பரம எதிரியாக பார்க்கும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் தேவேந்திர பட்னாவிஸை புகழ்ந்துள்ளது. நேற்று அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தேவேந்திர பட்னாவிஸை புகழ்ந்து தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் நக்சலைட் மாவட்டத்தை இரும்பு மாவட்டமாக மாற்ற தற்போதைய முதல்வர் விரும்பினால் வரவேற்கத்தக்கது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இப்போது தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும் பட்னாவிஸை புகழ்ந்து இருக்கிறார். இது தொடர்பாக சுப்ரியா சுலே அளித்த பேட்டியில், ''மறைந்த முன்னாள் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் கட்சிரோலி மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகளை தொடங்கினார்.
அதனை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னெடுத்துச் செல்வது வரவேற்கத்தக்கது. புதிய அரசு பதவியேற்ற பிறகு அமைச்சரவையில் தேவேந்திர பட்னாவிஸ் மட்டும்தான் செயல்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது. வேறு எந்த அமைச்சரும் செயல்பாட்டில் இறங்கியதாகத் தெரியவில்லை. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகிக்கொண்டே செல்கிறது. மாநில உள்துறை அமைச்சராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸிடம் இது குறித்து பேசுவேன்'' என்று தெரிவித்தார். மாநில அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் போன தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான சகன் புஜ்பாலும் முதல்வர் பட்னாவிஸை புனேயில் நடந்த நிகழ்ச்சியில் வெகுவாக பாராட்டி பேசினார்.
அதோடு சகன் புஜ்பாலும், சரத் பவாரும் புனேயில் ஒரு நிகழ்ச்சியில் சேர்ந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர். தற்போது சகன் புஜ்பால் தேசியவாத காங்கிரஸில் அஜித் பவார் அணியில் இருக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சிவசேனா(உத்தவ்)வும், பா.ஜ.கவும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டன. அதுவும் உத்தவ் தாக்கரேயும், தேவேந்திர பட்னாவிஸும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொண்டனர். அதோடு உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவை தேவேந்திர பட்னாவிஸ்தான் உடைத்ததாக உத்தவ் தாக்கரே கருதுகிறார். இதனால் இருவருக்கும் இடையே பகைமை இருந்து வருகிறது. அது போன்ற சூழ்நிலையில் உத்தவ் தாக்கரே கட்சி பத்திரிகை பட்னாவிஸை புகழ்ந்து இருக்கிறது.