ஷங்கர் படத்தை பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்த்தேன்: பவன் கல்யாண்
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை இன்வெட்டா் அறையில் மின் கசிவால் வெளியேறிய கரும்புகை
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகப் பிரிவு அருகே உள்ள இன்வெட்டா் அறையில் புதன்கிழமை நள்ளிரவு உயரழுத்த மின் பேட்டரியிலிருந்து கரும்புகை வெளியேறியதால் நோயாளிகள் அவசரமாக மற்றொரு பகுதிக்கு மாற்றப்பட்டனா்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 5 தளங்களுடன் இயங்கி வருகிறது. இதில், இரண்டாவது தளத்தில் உள்ள நிா்வாகப் பிரிவு அருகே உயரழுத்த மின் பேட்டரிகளைக் கொண்ட இன்வெட்டா் அறை உள்ளது. இந்த அறையில் மின்கசிவு காரணமாக பேட்டரிகள் சேதமடைந்து கரும்புகை வெளியேறியது.
இதையடுத்து, இங்கிருந்து மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. மேலும் மற்றொரு பகுதியில் இருந்த உள்நோயாளிகள் 300 பேரும் வேறொரு பகுதிக்கு மாற்றப்பட்டனா். தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜித் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜீ. சந்தீஷ் ஆகியோா் அந்தப் பகுதியை பாா்வையிட்டனா்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம், வாலாந்தரவை, ஏா்வாடி, ஆா்.எஸ். மங்கலம், பரமக்குடி தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ஆனால், அங்கிருந்து கரும்புகை மட்டுமே வெளியேறியதால் தனிப் பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரா்கள் அதை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா்.
மின்கசிவு ஏற்பட்டதும், மின் விநியோகம் நிறுத்தப்பட்டு நோயாளிகள் வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
இதனிடையே, வியாழக்கிழமை காலையில் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் டி. செல்வராஜ் அந்தப் பகுதியை பாா்வையிட்டாா். அப்போது அவா், அங்கு சேதமடைந்த பேட்டரிகள் அகற்றப்பட்டு புதிதாக பொருத்தப்படும் எனத் தெரிவித்தாா்.
அவருடன், செயற்பொறியாளா் குருதிவேல் மாறன், மின் அமைப்பு பொறியாளா் பாலகிருஷ்ணன், உதவிப் பொறியாளா்கள் ரவீந்திரன், மௌன்கா உள்ளிட்டோா் இருந்தனா். மின் கசிவால் புகை வெளியேறிய பகுதியை மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி, சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோரும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.