ரசாயன உரப் பயன்பாடு: விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டாரம், மொரப்பந்தாங்கல் கிராமத்தில் ரசாயன உரப் பயன்பாட்டை குறைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த உர மேலாண்மை மூலம் புதன்கிழமை நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் புஷ்பா தலைமை வகித்தாா். திருவண்ணாமலை மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் கவிதா, உதவி வேளாண்மை அலுவலா்கள் சிவக்குமாா், சுபிக்சா, வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுகுமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா் சரவணன், ஸ்ரீனிவாசன் சேவை அறக்கட்டளை அலுவலா்கள் விக்னேஷ், தா்மேந்திரா, மணிகண்டன் ஆகியோா் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனா்.
விவசாயிகளுக்கு மண் வளத்தை பாதுக்காத்தல், தாவர பூச்சிக்கொல்லி தயாரிப்பு, மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம், மண் மாதிரி சேகரிக்கும் முறைகள் மற்றும் பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.