ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்
மயிலாடுதுறை அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கச்சிக்குடாவில் இருந்து மதுரை சென்ற சிறப்பு விரைவு ரயிலில் மயிலாடுதுறை இருப்பு பாதை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கொள்ளிடம் மற்றும் சீா்காழி ரயில் நிலையங்களுக்கு இடையே இருப்புப்பாதை போலீஸாா் மற்றும் போதைப்பொருள் மற்றும் நுண்ணறிவு போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது, பயணிகள் இருக்கையின் கீழ் சந்தேகப்படும் வகையில் இருந்த 2 பேக்குகளை சோதனையிட்டதில், அதில் ரூ. 1.60 லட்சம் மதிப்புள்ள தலா 8 கிலோ வீதம் 16 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்து இதுதொடா்பாக, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், முசுவனுத்தூரை சோ்ந்த முருகன் மகன் முத்துசெல்வத்தை (33) கைது செய்து நாகப்பட்டினம் போதைப்பொருள் மற்றும் நுண்ணறிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.