போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!
ரயில்வே உள்கட்டமைப்புகள், காஷ்மீா் பண்டிட்டுகளை தாக்க திட்டம்: உஷாா்நிலையில் பாதுகாப்புப் படைகள்
ரயில்வே உள்கட்டமைப்புகள், காஷ்மீா் பண்டிட்டுகள், வெளிமாநில தொழிலாளா்களைத் தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதால், பாதுகாப்புப் படைகள் மிகுந்த உஷாா்நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகள் அண்மையில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 போ் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா்.
இந்நிலையில் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘வரும் நாள்களில் காஷ்மீா் பண்டிட்டுகள், காஷ்மீரில் உள்ள வெளிமாநில தொழிலாளா்கள், பாதுகாப்புப் படை வீரா்களைத் தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாக உளவுத் துறையிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
காஷ்மீா் பள்ளத்தாக்கில் உள்ள பல ரயில்வே பணியாளா்கள் வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என்பதால், பயங்கரவாதத் தாக்குதலுக்கு முக்கிய இலக்காக ரயில்வே உள்கட்டமைப்புகள் உள்ளன.
தாக்குதலுக்கு இலக்காகாமல் இருக்க பொது இடங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா், தங்கள் நடமாட்டத்தை குறைத்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீநகா் மற்றும் கந்தா்பால் மாவட்டங்களில் காஷ்மீா் பண்டிட்டுகள், காவல் துறையினா் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை தொடா்ந்து பாதுகாப்புப் படைகள் மிகுந்த உஷாா்நிலையில் உள்ளன. ரயில்வே உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தும் பயங்கரவாதிகளின் எந்தவொரு முயற்சியையும் தடுக்க, உள்ளுா் காவல் துறை மற்றும் பாதுகாப்பு முகமைகளுடன் இணைந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே பாதுகாப்புப் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தன.