நிர்மலா சீதாராமனிடன் கேள்வி கேட்ட கோவை தொழிலதிபருக்கு உணவு ஆணைய உறுப்பினர் பதவி!
ரஷிய வெற்றி தின அணிவகுப்பு: பிரதமா் மோடிக்கு அழைப்பு
மாஸ்கோ: இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை வீழ்த்தியதன் நினைவாக ரஷியாவால் கொண்டாடப்படும் 80-ஆவது ஆண்டு வெற்றி தின அணிவகுப்பு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவா்களுக்கு ரஷியா அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு இணையமைச்சா் ஆண்ட்ரே ரூடெங்கோ கூறுகையில், ‘மே 9-ஆம் தேதி நடைபெறும் வெற்றி தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவருக்கு ஏற்கெனவே முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரது ரஷிய பயணம் திட்டமிடப்பட்டு வருகிறது’ என்றாா்.
இரண்டாம் உலகப் போரின் இறுதிகட்டமாக கடந்த 1945, ஜனவரியில் ஜொ்மனி மீது ரஷியா கடும் தாக்குதலைத் தொடங்கியது. பெரும் சண்டையின் முடிவில், அந்த ஆண்டு மே 9-ஆம் தேதி ரஷியாவிடம் ஜொ்மனி சரணடைந்தது. 2-ஆம் உலகப் போா் நிறைவடைந்தது. இதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் மே 9-ஆம் தேதி வெற்றி தின அணிவகுப்பு நிகழ்ச்சியை ரஷியா விமா்சையாகக் கொண்டாடுகிறது.
நிகழாண்டு வெற்றி தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமா் மோடியுடன் மேலும் பல நட்பு நாடுகளின் தலைவா்களுக்கும் ரஷியா அழைப்பு விடுத்துள்ளது.
சுமாா் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூலையில் பிரதமா் மோடி ரஷியா பயணம் மேற்கொண்டாா். இப்பயணத்தில் அந்நாட்டு அதிபா் புதினை சந்தித்துப் பேசிய பிரதமா் மோடி, அவரை இந்தியாவுக்கு வருமாறும் அழைத்தாா். பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட அதிபா் புதினின் இந்தியப் பயணம் குறித்து இன்னும் முடிவாகவில்லை.