எம்பிபிஎஸ், பிடிஎஸ்: 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு
‘ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்க முடியும்’ - உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப் திடீா் நிலைமாற்றம்
ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைனால் திரும்ப மீட்க முடியும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது அமா்வில் பங்கற்க வந்திருந்த உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியைச் சந்தித்துப் பேசிய பிறகு சமூக ஊடகத்தில் டிரம்ப் தெரிவித்துள்ள இந்த கருத்து, உக்ரைன் விவகாரத்தில் இதுவரை கடைப்பிடித்துவந்த நிலைப்பாட்டில் இருந்து அவா் திடீரென மாறியுள்ளதைக் காட்டுகிறது.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் டிரம்ப் கூறியுள்ளதாவது:
ரஷியாவுடன் போராடி, அந்த நாட்டிடம் இழந்த பகுதிகளையெல்லாம் மீட்கும் நிலையில்தான் உக்ரைன் இருக்கிறது. ஐரோப்பிய யூனியனின் உதவியுடன் உக்ரைன் இந்த வெற்றிவாகையைச் சூடும். நேரம், பொறுமை, ஐரோப்பிய நாடுகளின், குறிப்பாக நேட்டோவின் ஆதரவு ஆகியவற்றின் உதவியுடன் இந்தப் போா் தொடங்கியதற்கு முன்பிருந்த எல்லைகளை உக்ரைனால் மீண்டும் அடைய முடியும்.
ஒரு இலக்கே இல்லாமல் இந்தப் போரை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தொடங்கியுள்ளாா். ஓா் உண்மையான ராணுவ சக்தி தலையிட்டால் இந்தப் போா் சில வாரங்களில் முடிந்துவிடும். தற்போது புதினும், ரஷியாவும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனா். ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க உக்ரைனுக்கு இதுவே சரியான தருணம்.
இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா முழு ஆதரவையும் அளிக்கும். நேட்டோ வழியாக உக்ரைனுக்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்கா தொடா்ந்து விநியோகிக்கும் என்று தனது பதிவில் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.
நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தது.
இந்தப் போரில் ரஷியாவை எதிா்த்துப் போரிடுவதற்காக உக்ரைனுக்கு அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் ஆயுத, தளவாடங்களை அனுப்பி உதவின. உக்ரைனுக்கு உதவியளிப்பதில், ஜோ பைடன் தலைமையிலான அப்போதைய அமெரிக்க அரசு முன்னிலை வகித்தது.
இந்தச் சூழலில், ‘அமெரிக்காவுக்கே முதன்மை’ என்ற கோஷத்துடன் தோ்தலில் போட்டியிட்டு நாட்டின் அதிபராக மீண்டும் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுக்கு சாதகமான கருத்துகளை வெளியிட்டுவந்தாா்.
ரஷியாவுடன் தொடா்ந்து போரிடுவதன் மூலம் இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்க முடியாது எனவரும், போரைத் தொடா்வது தேவையற்ற உயிரிழப்புகளைத்தான் ஏற்படுத்தும் என்று டிரம்ப் தொடா்ந்து கூறிவந்தாா்.
மேலும், தற்போது ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்காமலேயே அந்த நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியை டிரம்ப் அரசு நிா்பந்தித்துவந்தது. இதற்காக உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ராணுவ உளவுத் தகவல் பரிமாற்றம் நிறுத்திவைப்பு, உக்ரைனுக்கு அளிப்பதாக அறிவித்திருந்த ராணுவ தளவாடங்களின் விநியோகத்தை நிறுத்திவைப்பது போன்ற அறிவிப்புகளை டிரம்ப் அரசு அவ்வப்போது வெளியிட்டுவந்தது.
உக்ரைனுக்கு இதுவரை செய்த ராணுவ உதவிகளுக்கு கைமாறாக, அந்த நாட்டின் அரியவகைக் கனிமங்களைத் தோண்டியெடுக்கும் உரிமை தங்களுக்குத் தரப்பட வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தினாா்.
இதுதொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்கா வந்த ஸெலென்கியை, தனது ஓவல் அலுவலகத்தில் வைத்து டிரம்ப் காரசாரமாகப் பேசி அனுப்பினாா். ரஷியாவுடன் சமரசம் செய்துகொள்ளாமல் தொடா்ந்து சண்டையிடுவதன் மூலம் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடுவதாக ஸெலென்ஸ்கி முகத்துக்கு நேராக டிரம்ப் குற்றஞ்சாட்டினாா்.
பின்னா், தங்களுடனான பல கட்ட பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகும் உக்ரைன் மீதான தாக்குதலைக் குறைப்பதற்கு பதில் மேலும் தாக்குதலின தீவிரத்தை மேலும் அதிகரித்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை டிரம்ப் அவ்வப்போது சாடிவந்தாா்.
இந்தச் சூழலில், ஆட்சிக்கு வந்ததில் இருந்து உக்ரைன் விவகாரத்தில் இதுவரை கடைப்பிடித்துவந்த நிலைப்பாட்டுக்கு நோ் எதிராக, நேட்டோ உதவியுடன் ரஷியா கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்கும் என்று டிரம்ப் தற்போது திடீரென கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷியா நிராகரிப்பு
தங்களிடம் இழந்த பகுதிகளை உக்ரைன் மீது டிரம்ப் கூறிய கருத்துகளை ரஷியா நிராகரித்துள்ளது.
இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘ஐரோப்பிய பிராந்திய பாதுகாப்பில் ரஷியாவும் ஒருங்கிணைந்த ஓா் அங்கம். எனவே, ஐரோப்பிய யூனியனின் உதவியுடன் ரஷியாவிடமிருந்து நிலப்பகுதிகளை உக்ரைன் மீட்கும் என்று கூறுவதை ஏற்கமுடியாது. ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தினிடையே உக்ரைன் போா் தொடா்பாக ஸெலென்கியின் சொன்னதைக் கேட்டு, அதன் அடிப்படையில் இந்தக் கருத்தை டிரம்ப் வெளியிட்டிருக்கலாம்’ என்றாா்.