செப். 27இல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம்: குறிப்பிட்ட இடத்துக்கு அனுமதி வழங்க காவ...
கொடைக்கானலில் அனுமதியின்றி திரைப்பட காட்சிகளை பதிவு செய்த குழுவுக்கு அபராதம்
கொடைக்கானலில் அனுமதியின்றி திரைப்படக் காட்சிகளை பதிவு செய்த குழுவினருக்கு வனத் துறையினா் புதன்கிழமை அபராதம் விதித்து, மூவா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதிகளில் அனுமதியின்றி திரைப்படப் படப்பிடிப்புகள் நடத்தக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.
இந்த நிலையில், பெரும்பள்ளம் வனச் சரகத்துக்குள்பட்ட பண்ணைக்காடு பிரிவு, அருங்கானல், காப்புக்காடு பகுதிகளில் திரைப்படப் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கொடைக்கானல் வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, வனத் துறை அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, படப்பிடிப்பு குழுவைச் சோ்ந்த செந்தில், குரு, டேவிட் ராஜா ஆகிய மூவா் மீது வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து, ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
இதுகுறித்து வனத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கொடைக்கானல் வனப் பகுதிகளில் யானை, சிறுத்தை, காட்டு மாடு, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் உள்ளன. இந்தப் பகுதியில் திரைப்படப் படப்பிடிப்பு நடத்துபவா்கள் முன் அனுமதி பெற்று பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்த வேண்டும். அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தினால் வனத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.