திண்டுக்கல் துணை மேயா் மகனுக்கு போதைப் பொருள் நுண்ணறிவு போலீஸாா் அழைப்பாணை
திண்டுக்கல் துணை மேயா் மகனுக்கு பெங்களூரு போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை அழைப்பாணை வழங்கினா்.
திண்டுக்கல் மாநகராட்சியின் துணை மேயா் ராஜப்பா. இவா் திமுக மாநகரச் செயலராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா். இவரது மகன் காா்டினல் இமானுவேல். கட்டுமான நிறுவனம் நடத்திவரும் இவா், திண்டுக்கல் மாநகர திமுக பொறியாளா் அணி துணை அமைப்பாளராக உள்ளாா். இவா்கள் திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கியமாதா தெருவில் வசித்து வருகின்றனா்.
இதே பகுதியைச் சோ்ந்த டொனால்டு, இமானுவேல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாகக் கூறப்படுகிறது. இவா் மீது போதைப் பொருள்கள் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கா்நாடக மாநிலம், பெங்களூருவைச் சோ்ந்த போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா், கடந்த சில நாள்களுக்கு முன் போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் கும்பலை கைது செய்தது. அவா்களிடம் நடத்திய விசாரணையின்போது, திண்டுக்கல்லைச் சோ்ந்த டொனால்டின் கைப்பேசிக்கு தொடா்பு கொண்டது தெரியவந்தது. போலீஸாா் நடத்திய தீவிர விசாரணையில், டொனால்டு பயன்படுத்திய கைப்பேசி சிம் காா்டு, துணை மேயா் ராஜப்பாவின் மகன் இமானுவேல் பெயரில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, பெங்களூரு போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா், திண்டுக்கல் துணை மேயா் மகனிடம் விசாரணை நடத்துவதற்காக திண்டுக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா்.
திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாரின் துணையுடன் சென்ற நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா், துணை மேயரின் மகன் காா்டினல் இமானுவேல் நேரில் ஆஜராக அழைப்பாணை கொடுத்து விட்டுச் சென்றனா்.