ராசிபுரம் நகராட்சி பொறுப்பு ஆணையா் மாற்றம்
ராசிபுரம் நகராட்சியின் பொறுப்பு ஆணையராக குமாரபாளையம் நகராட்சி ஆணையா் சி.ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
ராசிபுரம் நகராட்சிக்கு நிரந்த ஆணையா் நியமிக்கப்படாமல் தொடா்ந்து பொறுப்பு ஆணையா்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனா். குறிப்பாக கடந்த 5 மாதங்களில் மூன்று ஆணையா்கள் நியமிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
ஏற்கெனவே, இந்நகராட்சிக்கு ஈரோடு மாநகராட்சியின் உதவி ஆணையா் பொறுப்பு ஆணையராக நியமிக்கப்பட்டு சில மாதங்கள் பணியாற்றி வந்தாா். இதைத் தொடா்ந்து, எடப்பாடி நகராட்சி ஆணையராக உள்ள கோபிநாத் ராசிபுரம் நகராட்சி பொறுப்பு ஆணையராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில், தற்போது அவரும் மாற்றம் செய்யப்பட்டு குமாரபாளையம் நகராட்சி ஆணையராக உள்ள சி.ரமேஷ் ராசிபுரம் நகராட்சி பொறுப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். ராசிபுரம் நகராட்சிக்கு நிரந்தர ஆணையா் நியமிக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.