ராஜபாளையம்: மூதாட்டி கொலை: 30 பவுன் நகை கொள்ளை; துப்பு துலங்கியதில் சிக்கிய கும்பல்... 6 பேர் கைது!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு ஜீவரத்திரனம் எனும் மூதாட்டி கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து அவரின் கழுத்து மற்றும் வீட்டில் இருந்து 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், ராஜபாளையம் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் சிலரை பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், மதன் ஆகியோர் மூதாட்டி கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதுடன் நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட நகையை, தேவி என்ற பெண்ணிடம் கொடுத்து பதுக்கி வைத்திருப்பது தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தேவியை பிடித்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் மூதாட்டி கொலையில், பிடிபட்டுள்ள 3 பேருக்கும் மூளையாகச் செயல்பட்டது தேவியின் கணவர் முத்துக்குமார் தான் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து முத்துக்குமார் உட்பட 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, கொலை சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட முத்துக்குமாரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்துகையில், மேலும் சில அதிர்ச்சிகர தகவல் வெளிவந்தது. அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜபாளையம் லட்சுமிபுரம் தெருவில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதிகளான ராஜகோபால் (வயது 75) மற்றும் அவரின் மனைவி குருபாக்கியம் (70) இருவரையும் கழுத்து நெரித்துக் கொலை செய்ததோடு அவர்களின் வீட்டில் இருந்து 20 பவுன் தங்க நகையை கொள்ளையடித்ததும் முத்துக்குமார் தான் என தெரியவந்தது.
அந்த சமயம், இந்த இரட்டை கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடினர். ஆனால், இதுவரை உண்மை குற்றவாளியை கண்டறிய முடியாமல் வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், மூதாட்டி ஜீவரத்தினம் கொலை மூலமாக துப்புதுலங்கி முன்னர் நிகழ்த்தப்பட்ட இரட்டைக் கொலை குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டிருப்பது போலீஸை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமிபுரம் தெருவில் வீட்டில் தனியாக வசித்து வந்த வயது மூத்த தம்பதியினரான ராஜகோபால், குரு பாக்கியம் ஆகியோர் கொலையும், திருவள்ளுவர் தெரு பகுதியில் மூதாட்டி ஜீவரத்திரனம் கொலையும் ஒரே மாதிரியாக கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர். மேலும், இந்த இரண்டு கொலையும் நகைக்காகவே நடத்தப்பட்டுள்ளது. வயது மூத்தவர்களை எளிதில் வீழ்த்திவிடலாம் என்ற எண்ணமும், தனியாக வசித்துவரும் வயதானவர்களை நோட்டமிட்டும் இந்த கொலைகள் நடத்தப்பட்டிருப்பதை விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. ஆகவே, முத்துக்குமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில் குற்றத்தை ஒப்புக்கொண்டான்.
மூதாட்டி ஜீவரத்தினம் கொலையில் கைதுசெய்யப்பட்டுள்ள ரமேஷ் மற்றும் மதன் இருவரின் மீதும் இதற்கு முன்பு எந்த குற்றப்பின்னணியும் இல்லை. ஆகவே ராஜகோபால்-குருபாக்கியம் தம்பதிகள் கொலையில் முத்துக்குமாருக்கு கூட்டாக செயல்பட்டவர்கள் யார் என விசாரணை மேற்கொண்டோம். அதன்படி, சேத்தூர் பகுதியைச் சேர்ந்த சங்கிலியாண்டி (40) ராஜபாளையம் பூபால்பட்டி தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (26) ஆகியோர் கூட்டாளியாக செயல்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதில் சதீஷ்குமார், பாரதிய ஜனதா கட்சி ராஜபாளையம் தெற்கு நகர பிரசார அணி செயலாளராக உள்ளார். இதனைத் தொடர்ந்து, இரட்டைக் கொலை தொடர்பாக சங்கிலியாண்டி, சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தோம்" என்றனர்.