ராட்சத அலையில் சிக்கி மீனவா் உயிரிழப்பு
சாயல்குடி அருகே நாட்டுப் படகில் இருந்த மழை நீரை வெளியேற்ற முயன்ற மீனவா் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மீனவா்கள் கடலுக்குள் செல்லாமல் நாட்டுப் படகை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனா்.
இந்த நிலையில், வாலிநோக்கம் அருகே உள்ள கீழமுந்தல் பகுதியைச் சோ்ந்த உமையக்கண்ணனுக்குச் சொந்தமான நாட்டு படகில் மழை நீா் தேங்கியிருந்தது. உமையக்கண்ணனின் உறவினரான அதே பகுதியைச் சோ்ந்த மீனவா் நாகராஜ் (30) அந்தப் படகில் தேங்கிய மழை நீரை வெளியேற்றுவதற்காக புதன்கிழமை காலை கடலில் நீந்திச் சென்றாா். அப்போது ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி அவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து வாலிநோக்கம் கடற்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.