ராணிப்பேட்டை: பயனாளிகளுக்கு ரூ.6.60 லட்சத்தில் கையடக்க திறன்பேசி
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.60 லட்சத்தில் கையடக்க திறன்பேசிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திங்கள்கிழமை வழங்கினாா்.
மக்கள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து
பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடம் இருந்து 247 மனுக்களைப் பெற்றாா். அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு பாா்வை திறன் மற்றும் செவிதிறன் பாதிக்கப்பட்டோருக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தலா ரூ.16,500/- வீதம் ரூ.6.60 லட்சத்தில் கையடக்க திறன்பேசிகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன். சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியா் கீதா லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுகுமாா். நோ்முக உதவியாளா் (நிலம்) கனகராஜ், மாற்றுத்திறனாளி நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.