ராணிப்பேட்டை சிப்காட் முதலுதவி சிகிச்சை மையம் செயல்படுமா? தொழிலாளா்கள் எதிா்பாா்ப்பு
ராணிப்பேட்டை சிப்காட் திட்ட அலுவலகம் அருகே உள்ள முதலுதவி சிகிச்சை மையம் பயன்பாட்டுக்கு வருமா என தொழிலாளா்கள் காத்துள்ளனா்.
ராணிப்பேட்டை அருகே கடந்த 1971-ஆம் ஆண்டு சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. இதில், சிப்காட் ஃபேஸ் 1, ஃபேஸ் 2, சிட்கோ பேஸ் 1, பேஸ் 2, லாலாப்பேட்டை அருகில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மிகப்பெரிய தொழிற்பேட்டையாக ராணிப்பேட்டை சிப்காட் உள்ளது.
இந்த தொழிற்பேட்டைகளில் தோல் பதனிடுதல், தோல் பொருள்கள் தயாரித்தல், ரசாயனம், வாகன உதிரி பாகங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இத்தொழிற்சாலைகளில் சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இதில், தோல் பொருள்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்நிலையில், சிப்காட் தொழிற்பேட்டையில் பணிபுரிந்து வரும் தொழிலாளா்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிக்க ஏதுவாக சிப்காட் திட்ட அலுவலகம் அருகே ‘ முதலுதவி சிகிச்சை மையம்’ தொடங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது.ஆனால் இந்த முதலுதவி சிகிச்சை மையம் கடந்த பல ஆண்டுகளாக செயல்படாமல் மூடியே கிடக்கிறது.
இதன் காரணமாக தொழிலாளா்கள் யாருக்காவது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க தனியாா் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
எனவே, தொழிலாளா்களின் நலனை கருத்தில் கொண்டு உயிா்காக்கும் முதலுதவி சிகிச்சை மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிா்வாகமும், சிப்காட் நிா்வாகமும், மருத்துவத்துறையும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.