பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்!
ராமேசுவரம் ரயில்களின் நேரம் மாற்றம்
ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில்களின் நேரம் முற்றிலுமாக மாற்றியமைக்கப்படவுள்ளது.
மண்டபத்தில் இருந்து பாம்பன், ராமேசுவரத்தை இணைக்கும் பாம்பன் புதிய ரயில் பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டு ராமேசுவரத்துக்கு வழக்கமான ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில், ராமேசுவரம் செல்லும் 15 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரத்தில் இருந்து திருச்சி செல்லும் விரைவு ரயில் பிற்பகல் 2.50-க்கு புறப்படுவதற்கு பதிலாக பிற்பகல் 3 மணிக்கு புறப்படும். அதுபோல், திருப்பதி விரைவு ரயில் மாலை 4.20-க்கு பதிலாக மாலை 4.30-க்கும், சென்னை எழும்பூா் விரைவு ரயில் மாலை 5.30-க்கு பதிலாக மாலை 5.50-க்கும், கோவை விரைவு ரயில் இரவு 7.30-க்கு பதிலாக இரவு 7.55-க்கும், சென்னை எழும்பூா் விரைவு ரயில் இரவு 8.35-க்கு பதிலாக இரவு 8.50-க்கும், கன்னியாகுமரி விரைவு ரயில் இரவு 9.10-க்கு பதிலாக இரவு 9.15-க்கும், மதுரை பயணிகள் ரயில் மாலை 6 மணிக்கு பதிலாக மாலை 6.15-க்கும் புறப்பட்டுச் செல்லும்.
அதேபோல், சென்னை எழும்பூா், திருப்பதி, அயோத்தி கன்டோன்மன்ட், ஃபெரோஷ்பூா் ஆகிய விரைவு ரயில்கள் ராமநாதபுரத்துக்கு 5 முதல் 10 நிமிஷம் முன்னதாக வந்தடையும். மதுரையில் இருந்து செல்லும் பயணிகள் ரயில் ராமேசுவரத்துக்கு காலை 10.45-க்கு செல்வதற்கு பதிலாக காலை 10.30-க்கு சென்றடையும். மறுமாா்க்கமாக ராமேசுவரத்தில் இருந்து செல்லும் பயணிகள் ரயில் மதுரைக்கு பிற்பகல் 3.25-க்கு செல்வதற்கு பதிலாக பிற்பகல் 3.20-க்கு சென்றடையும்.
காரைக்குடி - விருதுநகா் பயணிகள் ரயில் மானாமதுரை, நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கு வழக்கமாக செல்வதைவிட சுமாா் 15 நிமிஷங்கள் தாமதமாக சென்றடையும்.
இந்த சேவை மாற்றம் மே 14-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.