செய்திகள் :

ருசிக்கிறதா பன்.. பட்டர்.. ஜாம்! - திரை விமர்சனம்

post image

ராகவ் மிர்தாத் இயக்கத்தில், விஜய் டிவி பிரபலம் ராஜூ ஜெயமோகன் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் பன் பட்டர் ஜாம் திரைப்படம் எப்படி இருக்கிறது?

பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் நடிகர் ராஜூ

படத்தின் கதைக்களம் என்று பார்த்தால் எளிய, சாதாரணக் கதைக்களம்தான்! திருமண நிகழ்வு ஒன்றில் சந்திக்கும் இரண்டு அம்மாக்கள், தங்கள் பிள்ளைகளை மாறி மாறி புகழ்கிறார்கள். இப்படி ஒரு நல்ல பிள்ளையா? என வியக்கும் அம்மாக்கள், இரண்டு பிள்ளைகளையும் காதலில் விழ வைக்கத் திட்டமிடுகிறார்கள். இதை ஒரு காதல் திருமணமாகவே பிள்ளைகள் நினைக்க வேண்டும், ஆனால் இது உண்மையில் வீட்டில் அம்மாக்கள் பார்த்து செய்துவைத்த திருமணமாக இருக்க வேண்டும் இருவரும் திட்டமிடுகிறார்கள். இந்தத் திட்டத்திற்கு நடுவில் அந்த இரண்டு பிள்ளைகளும் என்ன ஆனார்கள்?  உண்மையில் அம்மாக்கள் புகழ்ந்த அளவிற்கு அவர்கள் அவ்வளவு நல்ல பிள்ளைகள்தானா? என்ற நகைச்சுவைக் களமே கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. 

பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் தேவதர்ஷிணி மற்றும் சரண்யா

களம் கேட்பதற்கு, நகைச்சுவைப் படத்திற்குத் தேவையான அனைத்தையும் கொண்டிருந்தாலும், படத்தில் இருந்திருக்க வேண்டிய அளவிலான நகைச்சுவைகள் இல்லை என்ற உண்மையை எடுத்த உடனேயே சொல்லிவிடவேண்டும்! நட்பு, காதல் என எதிலுமே ஒரு தெளிவு எழுத்திலும் இல்லை படத்திலும் இல்லை. பல இடங்களில் ராஜூவின் நகைச்சுவைகள் கை கொடுத்திருந்தாலும், அவை படத்தை வெற்றிப்பாதையில் திருப்பப் போதுமானதாக இல்லை. 

முதலில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள ராஜூவைப் பற்றி பேசவேண்டுமெனில், படத்தில் அவர் முழுவதுமாக ஹீரோவாகத் தெரியவில்லை என்றாலும், இன்னும் கொஞ்சம் முயற்சியும், பயிற்சியும் இருந்தால் கண்டிப்பாக அவர் ஹீரோவாக மிளர வாய்ப்பிருக்கிறது என்று சொல்லலாம்! ஆனால், ‘ஹீரோ’ என்பது வேறு! ‘நடிப்பு’ என்பது வேறு! அதில் நடிப்பைப் பற்றி பேசவேண்டுமெனில், ராஜூ நல்ல மதிப்பெண்ணே பெற்றுள்ளார். சிரிப்பு, அழுகை, சோகம் என இயல்பான நடிப்பை அவர் சரியாகத் தந்திருந்தபோதிலும் இயக்குநர் அவரை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே குறையாக உள்ளது. ராஜூவிற்கு மட்டுமல்லாமல், கதைக்கே அதுதான் பிரச்சனையாக உள்ளது. நல்ல இயக்குநரும் நல்ல திரைக்கதையுமுள்ள படமாக தேர்தெடுத்தால் ராஜூ கண்டிப்பாக உயரலாம்! 

பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் ஒரு காட்சி

அடுத்ததாக நடிகர் வரிசையில் முக்கியமான இடத்தில் இருப்பது, தேவதர்ஷிணி, சரண்யா, சார்லி ஆகியோர். தேர்ந்த நடிகர்களான இவர்கள் கதையில் பல இடங்களில் சரியாக பயன்படுத்தப்படவில்லை அல்லது ஓவராக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் திகட்டாத, நகைப்பூட்டும் நடிப்பை வாங்க இயக்குநர் திணறியிருப்பது நன்றாகத் தெரிகிறது. அவர்களது நடிப்பில் குறைகூற எதுவும் இல்லை என்றாலும், அவர்களைக் காட்டிய விதத்தில் இயக்குநருக்கு கொஞ்சம் மைனஸ் மார்க்குகள் தரப்பட வேண்டியுள்ளது. அம்மாக்களாக வரும் அவர்களின் நடிப்பு எப்போது நாம் பார்த்த, ரசித்த வடிவில் இல்லாமல், கொஞ்சம் தூக்கலாக கொடுக்க நினைத்து கப்பலைக் கவிழ்த்திருக்கிறார்கள். அதே கதிதான் சீனியராக வந்த விக்ராந்த்திற்கும். மாஸ் காட்சிகளில் இருக்கும் ஸ்லோ மோசன் காட்சிகள், பொறுமையிழக்க வைத்ததாகவே சொல்லலாம். ஆனால் விக்ராந்த் ஒரு மாஸான சீனியர் என்ற பொறுப்பை சரியாக செய்திருக்கிறார். 

பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் ஒரு காட்சி

எழுத்து எனப் பார்த்தால், அங்குதான் நல்ல அடி! திரைக்கதையில் எந்த சுவாரசியமும் இல்லை. நகைச்சுவைக் காட்சிகள் மட்டுமே அலுப்புத் தட்டும் இடங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகின்றன. அதுவும் சில இடங்களில் நம்மைக் கைவிடுகின்றன. ராஜூவின் காதல் காமெடிகள் முதல் பாதியில் நம்மைக் குலுங்க வைத்தாலும், கதையின் போக்கு நம்மைக் கலங்க வைக்கின்றன. இரண்டாம் பாதியில் வந்த "Heater Repair" காமெடி மட்டுமே படத்தில் நல்ல காமெடியாக மனதில் நிற்கிறது. சில இடங்களில் அப்பா, அம்மா அல்லது ஹீரோவே சொல்லும் மோட்டிவேசனல் வசனங்கள் அவுட் டேட்டட் ஆன வகையில் எழுதப்பட்டுள்ளது மேலுமொரு குறை!

படத்தில் நட்பு என ஒன்று காட்டப்படுகிறது. அதன் ஆழமும் உணரும்படியாக இல்லை, அந்த நட்பு முறியும்போது அந்த வலியும் கடத்தப்படவில்லை. முக்கியமான காட்சிகள் சரியாக காட்சிப்படுத்தப்படவில்லை. அந்த நண்பன் கதாப்பாதிரத்தையும் சரியாக எழுதவுமில்லை. ராஜூவை உயிராக நினைப்பதாகச் சொல்லும் அவன், கடைசியில் எதன் மூலம் திருப்தி அடைகிறான் என்பது புதிராகவே இருக்கிறது! ஏதேதோ போராடி கடைசிவரை அவர்களது நட்பு மீளவில்லை.

பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் ஒரு காட்சி

ஆனால் காலேஜ் காதலில் வரும் டுவிஸ்ட்டை ராஜூ எடுத்துக்கொள்ளும் விதம் புதிதாகவும், ரசிக்கும்படியாகவும் இருந்தது. ஆனால் அதன்பின் அவர் செய்பவை எல்லாம் வழக்கமான சினிமா விஷியங்கள். நண்பன் பிரிந்தவுடன் அவர் வகுப்பறையில் தனியாகப் பேசுவது, காதலி போனவுடன் குடிப்பது, இதையெல்லாம் இன்னுமா படமாக்குகிறார்கள் என்ற சலிப்பு தூக்கலாக இருக்கும் இடங்கள்! மொத்த படத்தில் ஆங்காங்கே சில இடங்கள் மட்டுமே ரசிக்கும்படியாக உள்ளன. ஆனால் அந்த சில காட்சிகளுக்காக 2 மணிநேரம் உட்கார முடியுமா? சில காட்சிகள் இன்னேரம் MX Player ஆக இருந்தால் ஓடவிட்டிருக்கலாம் என்றே தோன்றியது. முதல் ஹீரோயினுடன் வரும் காட்சிகள் ஆரம்பத்தில் ரசிக்க வைத்தாலும் போகப் போக, அந்தக் கதாப்பாத்திரம் சரியாக உருவாக்கப்படாததால், அதை அவரால் சரியாக வெளிக்கொண்டுவரவும் முடியவில்லை. 

பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் ஒரு காட்சி

எங்கெங்கோ சென்று பன் பட்டர் ஜாமுக்கு ஒரு விளக்கமும் கொடுத்து Best Friend-ஐத் திருமணம் செய்துகொள்ளலாமா? வேண்டாமா? என வந்து நிற்பது அவ்வளது தெளிவான முடிவாகத் தெரியவில்லை. அதற்கான முடிவை நோக்கிய பயணமும் கிரின்ஜ் எனச் சொல்லிவிடும் அளவில்தான் இருக்கின்றன. 

மொத்தத்தில் கதையின் ஆரம்பத்தில் கையில் எடுத்த களத்தை சரியாகப் பயன்படுத்தி சரியாக எழுதி, சரியாக இயக்கியிருந்தால், படம் கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடும் படமாக வந்திருக்கும். ஆனால் இப்போது போதுமான நகைச்சுவைகள் இல்லாத ‘பன்’னையும் நல்ல நடிகர்களின் திகட்டும் நடிப்பைக் கொண்ட 'ஜாமையும்’ வைத்து திரைப்படமாக வெற்றிக்குத் திணறுகிறது இந்த பன் பட்டர் ஜாம்!

மறுவெளியீடானது பாட்ஷா திரைப்படம்..! இயக்குநர் கூறியதென்ன?

நடிகர் ரஜினி நடிப்பில் உருவான பாட்ஷா திரைப்படம் இன்று திரையரங்குகளில் மறுவெளியீடானது. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷா திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. தேவா இசையில்... மேலும் பார்க்க

உலக சாதனையுடன் புதிய அணியில் ஒப்பந்தமானார் ஒலிவியா ஸ்மித்!

மகளிர் கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக ஒலிவியா ஸ்மித என்ற வீராங்கனை அதிக தொகைக்கு ஒப்பந்தமாகியுள்ளார். கனடாவைச் சேர்ந்த ஒலிவியா ஸ்மித் (20 வயது) லிவர்பூல் கால்பந்து அணிக்காக விளையாடி வந்தார். இவரை ஆ... மேலும் பார்க்க

பூஜா ஹெக்டேவுக்கு அமலா ஷாஜி போட்டியா? 1 கோடி பார்வைகளைக் கடந்த ரீல்ஸ்!

இன்ஸ்டாகிராம் பிரபலம் அமலா ஷாஜி கூலி படத்தின் மோனிகா பாடலால் மீண்டும் வைரலாகியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படத்தில் நடிகர்கள் ரஜினி, ஆமிர் கான், சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹ... மேலும் பார்க்க

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூலை 04 - 10) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)வீண் விவாதங்களைத... மேலும் பார்க்க

ஓடிடியில் வெளியானது குபேரா!

நடிகர் தனுஷ் நடித்த குபேரா படம் ஓடிடி தளத்தில் இன்று(ஜூலை 18) வெளியாகியுள்ளது.சேகர் கம்முலா இயக்கத்தில் பான் இந்தியப் படமாக உருவான குபேரா, உலகம் முழுவதும் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியானது. கலவையான விம... மேலும் பார்க்க