கர்நாடகம் நக்சலைட்டுகள் இல்லாத மாநிலமாக உருவாகும்: துணை முதல்வர் டி. கே. சிவகுமா...
ரூ.1.50 லட்சம் லஞ்சம்: பள்ளி துணை ஆய்வாளா் பணியிடை நீக்கம்
திருவண்ணாமலையில் ஆசிரியா் நியமனத்துக்கு ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் பள்ளி துணை ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருவண்ணாமலை - திருக்கோவிலூா் சாலை, சாரோன் பகுதியில் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் காலியாக இருந்த ஆசிரியா் பணிக்கு கவிதா என்பவா் தோ்வு செய்யப்பட்டாா்.
இவரது பணி நியமனம் தகுதியின் அடிப்படையில்தான் நடந்துள்ளதா என்பதை பள்ளிக் கல்வித்துறை ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும் என்பது விதி. இந்த விதியின் அடிப்படையில் கவிதாவின் நியமனத்துக்கு அனுமதி அளிக்க திருவண்ணாமலை கல்வித்துறையில் இடைநிலை பள்ளி துணை ஆய்வாளராக பணிபுரிந்து வந்த செந்தில்குமாா் லஞ்சம் கேட்டாராம்.
இதையடுத்து, ரூ.1.50 லட்சத்தை பள்ளி துணை ஆய்வாளா் செந்தில்குமாரின் மனைவி புஷ்பவள்ளியின் வங்கிக் கணக்கிற்கு கூகுள் செயலி மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாம்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகனுக்கு புகாா் சென்றது.
விசாரணை நடத்திய முதன்மைக் கல்வி அலுவலா், பள்ளி துணை ஆய்வாளா் செந்தில்குமாரை செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.