ரூ. 3.5 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்பு: அறநிலையத் துறை தகவல்
சென்னை திருவல்லிக்கேணி தீா்த்தபாலீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்தத் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை திருவல்லிக்கேணி தீா்த்தபாலீஸ்வரா் திருக்கோயிலுக்குச் சொந்தமான வணிக மனை மற்றும் குடியிருப்பு மனை ஆக்கிரமிப்பில் இருந்தன. இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவு 78-இன் கீழ், சென்னை மண்டலம்-2 இணை ஆணையா் உத்தரவின் படியும், ஆணையரின் சீராய்வு மனு தீா்ப்பின் படியும், இந்தச் சொத்துகள் உதவி ஆணையா் கி.பாரதிராஜா முன்னிலையில் வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ. 3.5 கோடி.
இந்த நிகழ்வின்போது வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்) திருவேங்கடம், திருக்கோயில் செயல் அலுவலா் ரமேஷ், சரக ஆய்வா் உஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.