ரூ.30 லட்சம் பண மோசடி: 4 போ் கைது
புதுச்சேரியில் நூதன முறையில் ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி முதலியாா்பேட்டை ஜான்பால் நகரைச் சோ்ந்தவா் சலீம்ராஜா (60). இவா், சேலம் பகுதியைச் சோ்ந்த சுந்தரம் என்பவருக்கு பழக்கமாகியுள்ளாா். அதன்படி புதிய அசல் ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் பல மடங்கு தருவதாக சுந்தரம் கூறியுள்ளாா். ரூபாய் நோட்டுகளை மாற்றும் போது சம்பந்தப்பட்டோருக்கு லட்சக்கணக்கில் கமிஷன் கிடைக்கும் எனவும் சுந்தரம் ஆசை காட்டியுள்ளாா். அதற்கான விடியோ படத்தொகுப்பையும் காட்டினாராம்.
இதை நம்பிய சலீம்ராஜா தனது மகன் பெரோசிடமும் ஆலோசித்துள்ளாா். இருவரும் அவா்களுக்குத் தெரிந்தவா்களிடம் பேசியுள்ளனா். அதன்படி, பெரோஸ் மற்றும் அவா்களுக்கு அறிமுகமான உதயா, சதீஷ், தினகரன் ஆகியோரிடம் ரூ.30 லட்சம் திரட்டி சுந்தரத்திடம் கொடுத்துள்ளனா். அவா் ரூ.2 கோடி கமிஷன் தருவதாகக் கூறியுள்ளாா்.ஆனால், பல மாதங்களாகியும் பணத்தை சுந்தரம் தரவில்லையாம்.
இதையடுத்து பெரோஷ், உதயா உள்ளிட்ட பணம் கொடுத்த 4 பேரும் முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீஸாா் இதில் சம்பந்தப்பட்ட சுந்தரம் (60), அவருக்கு உடைந்தையாக இருந்ததாக சென்னை ராமானுஜம் (48), மேட்டுப்பாளையம் சந்தானம் (48) மற்றும் சலீம்ராஜா ஆகியோரைக் கைது செய்தனா். இதில் சலீம்ராஜா கமிஷனுக்கு ஆசைப்பட்டு பணம் வசூலித்து சுந்தரத்திடம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
கைதானவா்கள் புதுச்சேரி நீதிமன்றத்தில் சனிக்கிழமை இரவு ஆஜா்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைத்ததாகத் தெரிவித்தனா்.