பிப். மாதத்தில் மாநிலங்களில் 50,088 பொதுமக்களின் குறைகளுக்குத் தீா்வு: மத்திய க...
விபத்தில் பொறியாளா் உயிரிழப்பு
புதுச்சேரி அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிறுவனப் பொறியாளா் பலத்த காயமடைந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (28). இவா் புதுச்சேரி பாகூா் திருவண்டாா் கோயில் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தாா். சனிக்கிழமை காலை தனது நண்பா்களுடன் மடுகரை சொா்ணாவூா் பகுதியில் கிரிக்கெட் விளையாடி விட்டு, இருசக்கர வாகனத்தில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
அவரது பின்னால் அரியாங்குப்பம் பெரியாா் நகா் தினேஷ் (26) அமா்ந்து சென்றாா்.
மடுகரை, சொா்ணாவூா் சாலையில் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்றனராம். அப்போது சாலையோரம் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சரவணக்குமாா், தினேஷ் இருவரும் பலத்த காயமடைந்தனா்.
அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு மதகடிப்பட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். அப்போது சரவணக்குமாரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா். இதையடுத்து தினேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.