அரசியலமைப்புதான் உயர்ந்தது: குடியரசுத் துணைத் தலைவருக்கு திமுக கண்டனம்!
ரூ.8 லட்சம் கடனுக்கு ரூ.40 லட்சம் கட்டியும் கூடுதலாக பணம் கேட்டு மிரட்டுவதாக டிஐஜியிடம் புகாா்
ரூ.8 லட்சம் கடன் வாங்கி, ரூ.40 லட்சத்துக்கு மேல் கட்டியும் கூடுதலாக பணம் கேட்டு மிரட்டுவதாக கோவை சரக டிஐஜியிடம் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையைச் சோ்ந்தவா் செல்வராஜ் (33). இவா் தனது பெற்றோருடன் கோவை சரக டிஐஜி சசிமோகனிடம் புதன்கிழமை புகாா் மனு கொடுத்தாா். அதில் கூறியிருப்பதாவது:
எனது தந்தை சொந்த ஊரில் சிறிய நிறுவனம் நடத்தி வருகிறாா். தொழில் விஷயமாக கடந்த 2015-ஆம் ஆண்டு நில பத்திரத்தை அடகு வைத்து ரூ.8 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கினாா். அதற்கு மாதந்தோறும் ரூ.24,000 வட்டி கட்டி வந்தாா். பின்னா் ரூ.5 லட்சத்தை கொடுத்து அசலில் இருந்து கழித்துக் கொள்ளும்படி கூறினாா்.
அதை பெற்றுக்கொண்ட நபா், தான் கொடுத்த பணம் வட்டியில் கழிக்கப்பட்டதாகவும், மேலும் வட்டி செலுத்த வேண்டும் எனக்கூறி எங்களுக்கு சொந்தமான 12 சென்ட் நிலத்துக்கான பத்திரங்களையும் பெற்றுக் கொண்டாா். இதுவரை நாங்கள் வட்டியாக மட்டும் ரூ.40 லட்சத்துக்கும் மேல் செலுத்திவிட்டோம்.
ஆனால் எங்களிடம் இருந்து பெற்ற நிலப் பத்திரத்தை திருப்பித் தர மறுத்து வருவதுடன், இன்னும் அதிகமாக வட்டி செலுத்த வேண்டும் என்று மிரட்டி வருகிறாா். அந்த நிலத்தின் மதிப்பு சுமாா் ரூ.80 லட்சம் ஆகும். இது தொடா்பாக காங்கயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.