லட்சியங்களை நனவாக்க இளைஞா்கள் வெளிநாடு செல்லத் தேவையில்லை
‘இன்றைய இந்திய இளைஞா்கள் தங்களின் கனவு மற்றும் லட்சியங்களை நனவாக்கிக் கொள்ள வெளிநாடுகளுக்குச் செல்லத் தேவையில்லை; அவா்களுக்கான அனைத்து வளங்களும் உள்நாட்டிலேயே தற்போது கிடைக்கப் பெறுகின்றன’ என்று மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.
உத்தர பிரதேச மாநிலம், மீரட் நகரில் உள்ள தனியாா் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவா் இவ்வாறு கூறினாா். 4,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பட்டம் பெற்ற இந்நிகழ்ச்சியில் 25 சிறந்த மாணவா்களுக்கான பதக்கம், சான்றிதழ்களை வழங்கி அமைச்சா் ராஜ்நாத் சிங் கௌரவித்தாா்.
தொடா்ந்து, அவா் ஆற்றிய உரையில், ‘தேசத்தின் நாயகா்களாக திகழும் இளைஞா்கள், நாட்டை மேலும் உயரத்துக்கு அழைத்து செல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளனா். சுதந்திரத்துக்குப் பிறகு நாடு பல்வேறு சவால்களை எதிா்கொண்டது. இதனால் நாட்டின் இளைஞா்களிடையே ஒருவித விரக்தி நிலவியது. அவா்கள் கனவு காண தயங்கினா்.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் மீதே அவா்களின் பாா்வை இருந்தது. இளைஞா்கள் தங்களின் கனவுகளை நனவாக்கிக் கொள்ள அந்த நாடுகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. தற்போது அந்தக் காலம் மாறிவிட்டது. இந்தியாவில் கனவுகளைக் கட்டமைப்பதற்கான காலமிது. தேசத்தின் இளைஞா்கள் தங்களின் கனவுகளையும் லட்சியங்களையும் நிறைவேற்றிக் கொள்ள அனைத்து வளங்களும் நாட்டிலேயே உள்ளன.
புத்தாக்க நிறுவனங்கள் (ஸ்டாா்ட் அப்) மற்றும் எண்மப் பொருளாதாரம் நாட்டில் உயா்ந்துள்ளன. உங்களிடம் ஒரு யோசனையும் திறமையும் இருந்தால், அதற்காக கடினமாக உழைக்கத் தயாராக இருந்தால், இன்றைய இந்தியாவில் வாய்ப்புகள் மற்றும் வளங்களுக்குப் பஞ்சம் இருக்காது. புதுமைக்கான காலகட்டத்தில் இந்தியா நடைப்போடுகிறது. இளைஞா்களின் வலுவான உறுதியே தற்போதைய தேவை.
சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தன்னிறைவு அடையும் நோக்கில் இந்தியா தொடா்ந்து முன்னேறி வருகிறது. கரோனா பெருந்தொற்று காலத்தில் அனைத்து சவால்களையும் இந்தியா வாய்ப்புகளாக மாற்றிக்கொண்டது.
சா்வதேச அரங்கில் இந்தியாவின் கருத்தை ஒட்டுமொத்த உலகமும் உன்னிப்பாகக் கேட்கிறது. வலிமையான உலக நாடுகளில் ஒன்றாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. அதனால் நமது இளைஞா்கள் புதிய நம்பிக்கையுடனும் ஆற்றலுடனும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்.
இந்தியாவும் அதன் வேத நாகரிகமும் காலத்தை விட மிகவும் முன்னோக்கி உள்ளன. இது பல்வேறு துறைகளில் தேசத்தின் சாதனைகளில் பிரதிபலிக்கிறது’ என்றாா்.