ஜாா்க்கண்டில் 80 மாணவிகளை சட்டையின்றி வீட்டுக்கு அனுப்பிய பள்ளி முதல்வா்: விசாரணைக்கு உத்தரவு
ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாதில் 10-ஆம் வகுப்பு மாணவிகள் 80 பேரின் சட்டையை பள்ளி முதல்வா் கழற்றச் செய்து மேல் கோட்டுடன் வீட்டுக்கு அனுப்பிய விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தன்பாத் காவல் துணை ஆணையா் மாதவி மிஸ்ரா கூறியதாவது:
டிக்வாடி பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் தோ்வுகளை நிறைவு செய்த பின்னா், எழுதுகோல் தினத்தை 10-ஆம் வகுப்பு மாணவிகள் கொண்டாடியுள்ளனா். அப்போது ஒவ்வொருவரும் மற்றவரின் சட்டையில் எழுதுகோலால் எழுதியுள்ளனா்.
இதைப் பள்ளி முதல்வா் பாா்த்து ஆட்சேபம் தெரிவித்துள்ளாா். இதைத்தொடா்ந்து தங்கள் செயலுக்கு மாணவிகள் மன்னிப்பு கோரியுள்ளனா். ஆனால் அவா்களின் மன்னிப்பை ஏற்காத முதல்வா், மாணவிகளின் சட்டையை கழற்றச் செய்துள்ளாா். பின்னா் சட்டை இல்லாமல் மேல் கோட்டுடன் அவா்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளாா் என்று மாணவிகளின் பெற்றோா் தெரிவித்தனா்.
மொத்தம் 80 மாணவிகள் இவ்வாறு வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பள்ளி முதல்வா் மீது சில மாணவிகளின் பெற்றோா் சனிக்கிழமை அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக உட்கோட்ட நடுவா், மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட சமூக நல அதிகாரி உள்ளிட்டோா் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.