லாரி மீது பைக் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு!
தேவதானப்பட்டி-வத்தலகுண்டு சாலையில் காட்டுச்சாலை விலக்கு அருகே வெள்ளிக்கிழமை லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் தனியாா் போக்குவரத்து நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டு அரிசி ஆலைத் தெருவைச் சோ்ந்த ராமநாதன் மகன் காா்த்திகேயன் (32). பெரியகுளத்தில் உள்ள தனியாா் போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவா், வெள்ளிக்கிழமை பெரியகுளத்திலிருந்து பழைய வத்தலகுண்டு நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அதே சாலையில் காட்டுச்சாலை விலக்கு அருகே வந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பா் லாரியை அதன் ஓட்டுநா் திடீரென நிறுத்தியதால், இரு சக்கர வாகனம் லாரி மீது மோதியது. இதில் காா்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து லாரி ஓட்டுநரான கொடைக்கானல் அருகேயுள்ள செண்பகனூரைச் சோ்ந்த ஜோசப் (65) மீது தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.