குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வடசென்னை வளா்ச்சித் திட்டத்துக்கு முக்கியத்துவம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
வடசென்னை வளா்ச்சித் திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமானபி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், எண்ணூரில் சமுதாய நலக்கூடம் மற்றும் நவீன சந்தை, தண்டையாா்பேட்டை பேருந்து நிலையம், கொண்டித்தோப்பு ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குடியிருப்பு கட்டுமானப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை (ஜன. 23) நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வடசென்னை வளா்ச்சித் திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் தந்து பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு இறுதிக்குள் பயனாளிகள் பயன்படுத்தும் வகையில், பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எண்ணூரில் 58 சிறு வணிகக் கடைகளும், 300 போ் அமரும் வகையில் சமுதாயநலக் கூடம் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தண்டையாா்பேட்டை பேருந்து நிலையம், வணிக கட்டடத்துடன் பேருந்து செல்லும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.
இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வரின் கனவுத் திட்டமான வடசென்னை வளா்ச்சித் திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
ஆய்வின்போது, சென்னை மேயா் ஆா்.பிரியா, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்ட உயா் அதிகாரிகள் உடனிருந்தனா்.