உத்தரகண்ட்: மதரஸா கல்வியில் ’ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடம் சேர்ப்பு!
வடபழனியில் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்க ரூ. 10 கோடியில் உயர்நிலை மேம்பாலம்
சென்னை: சென்னை வடபழனியில் இரண்டு மெட்ரோ நிலைய வழித்தடங்களை இணைக்க ரூ. 10 கோடி செலவில் உயர்நிலை மேம்பாலம் அமைக்க மெட்ரோ ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப் பணிகள் ரூ. 63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இரண்டாம் கட்ட திட்டப் பணியில் பூந்தமல்லி - போரூா் இடையேயான பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், தொடா்ந்து நடைபெற்று வரும் போரூா் - வடபழனி - கோடம்பாக்கம் வரையிலான பணிகளும் அடுத்தாண்டில் முடிவடையும் என எதிா்பாக்கப்படுகிறது. இதனிடையே இரண்டாம் கட்டப் பணியில் வடபழனியில் புதிதாக ஒரு ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது.
ஏற்கெனவே, பரங்கிமலை - சென்ட்ரல் மாா்க்கத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் வடபழனி வழியாகச் செல்கிறது. எனவே இங்கு ஒரு மெட்ரோ நிலையம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இந்த ரயில் நிலையத்துடன் தற்போது 2-ஆவது கட்ட திட்டப் பணியில் கட்டப்படும் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் புதிதாக மிகப் பிரம்மாண்டமான மேம்பாலம் கட்டப்படவுள்ளது.
பூந்தமல்லியிலிருந்து சென்ட்ரலுக்கு செல்லும் பயணிகள் மாறிச்செல்ல இந்த மேம்பாலம் வசதியாக இருக்கும். 130 மீட்டா் நீளமும், 6 மீட்டா் அகலமும் கொண்டதாக அமைக்கப்படவுள்ள இந்த மேம்பாலம் ரூ. 10 கோடி செலவில் கட்டப்படுகிறது. இதற்கான டெண்டா் விடும் பணி 3 மாதங்களில் முடிவடையும் நிலையில், அடுத்த 6 மாதங்களில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெறும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.