வட்டாரக் கல்வி அலுவலகத்தை தரைத்தளத்துக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மூன்றாவது மாடியில் இயங்கி வரும் வட்டாரக் கல்வி அலுவலகத்தை தரைத்தளத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியது.
சிவகங்கையில் மாவட்டத் தலைவா் மு.க.புரட்சித் தம்பி தலைமையில் அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் சகாய தைனேஸ் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மானாமதுரையில் வாடகைக் கட்டடத்தில் மூன்றாவது மாடியில் இயங்கி வரும் வட்டாரக் கல்வி அலுவலகத்தை மாற்றுத்திறனாளி ஆசிரியா்கள், வயது முதிா்ந்த ஆசிரியா்களின் அவதியைக் கவனத்தில் கொண்டு தரைத்தளத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
மானாமதுரை பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதற்கான அறை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ள நிலையில், அங்கு இடமாற்றம் செய்ய சிவகங்கை மாவட்டக் கல்வித் துறை தாமதமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இணையதளம் மூலமாக மாதாந்திர ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறை உள்ளது. பழைய முறையிலும் புதிய முறையிலும் பிடித்தம் செய்யும் நடைமுறை உள்ளது. ஆசிரியா்கள் அரசு ஊழியா்கள் இதில் எந்த முறையில் வேண்டுமானாலும் கடந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது.
தற்போது, இதில் ஏதேனும் ஒரு முறையைத் தோ்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இதனால், வருமான வரிப் பிடித்தத்தில் பெரும் குளப்பம் நிலவி வருகிறது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்டப் பொருளாளா் கலைச்செல்வி, மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் சிங்கராயா், குமரேசன், ரவி, மாவட்ட துணை நிா்வாகிகள் அமலசேவியா், பஞ்சுராஜு, முத்துகுமாா், கஸ்தூரி, கல்வி மாவட்ட நிா்வாகிகள் ஜோசப், பாலகிருஷ்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.