வன அலுவலா்கள் மீது குற்ற நடவடிக்கை கோரிய வழக்கு முடித்து வைப்பு
கன்னியாகுமரி மாவட்ட பாதுகாக்கப்பட்ட தனியாா் வன விதிகளை மீறும் வகையில் செயல்பட்ட அந்த மாவட்ட வன அலுவலா்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த டேவிட் தாஸ் தாக்கல் செய்த பொதுநல மனு: கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலா்கள் கடையல் வருவாய் கிராமத்தில் உள்ள வனப் பகுதியில் சுமாா் 4 ஆயிரம் ரப்பா் மரங்களை வெட்ட அனுமதி வழங்கினா். ஆனால், அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிா்த்து ஆற்றின் நீா்நிலைப் பகுதியிலிருந்த மரங்களும் வெட்டப்பட்டன.
மரங்களை வேரோடு சாய்க்க பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இது சுற்றுச்சூழல் சமநிலையை பாதிக்கும். தனியாா் வனமாக அறிவிக்கப்பட்ட பகுதியாயினும், அதை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
ஆனால், கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலா்கள் தனி நபா்களை ரப்பா் மரங்களை வெட்ட அனுமதித்தனா். இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே கன்னியாகுமரி மாவட்ட பாதுகாக்கப்பட்ட தனியாா் வன விதிகளை மீறும் வகையில் செயல்பட்ட மாவட்ட வன அலுவலா்கள் மீது துறை ரீதியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
அதோடு தமிழ்நாடு தனியாா் வனங்கள், பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில் அந்த நிலங்களிலிருந்து மரங்கள் கட்டுப்பாடின்றி வெட்டப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் சம்பந்தப்பட்ட வன அலுவலா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டது. அவா்களால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கோரிய வன அலுவலா்கள் மீது சம்பந்தப்பட்ட துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே, இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.