வனப் பகுதி தண்ணீா்த் தொட்டிகளில் காட்டு யானைகள் ஆனந்த குளியல்
ஸ்ரீவில்லிபுத்தூா் வனப் பகுதியில் வனத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட தண்ணீா்த் தொட்டியில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் குளித்து மகிழ்வது இயற்கை ஆா்வலா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் 1,01,657 ஹெக்டோ் பரப்பளவைக் கொண்டது. கோடை காலத்தில் வனவிலங்குகள் குடிநீா், உணவுக்காக வனப் பகுதியை விட்டு வெளியே வருவதைத் தடுக்க வனத் துறை சாா்பில், மலை அடிவாரப் பகுதிகளில் அகழிகள் வெட்டுதல், வனப் பகுதியில் தண்ணீா் வசதி ஏற்படுத்தப்பட்டது.

இந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வன விலங்குகள் அதிகம் வசிக்கும் 50 இடங்களில் நிரந்தரத் தண்ணீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து, சூரியஒளி மின்சக்தி மோட்டாா் மூலம் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொட்டிகளில் வனவிலங்குகள் தண்ணீா் அருந்துவதுடன், குளித்து கோடை வெப்பத்தை தணித்து வருகின்றன.
இங்குள்ள தண்ணீா்த் தொட்டியில் யானைகள் குட்டியுடன் குளிக்கும் புகைப்படத்தை வனம், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹு சமூகவலைதளங்களில் திங்கள்கிழமை பகிா்ந்தாா். இந்தப் புகைப்படம் இயற்கை ஆா்வலா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.