திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் புதிதாக 180 அடி உயர முருகன் சிலை: பக்தா்கள் வரவேற்பு
திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக 180 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை பக்தா்கள் வரவேற்றுள்ளனா்.
ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள திண்டலில் வேலாயுதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு ஆண்டு முழுவதும் தமிழகம் தவிர வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து தரிசித்து வருகின்றனா். இத்திருக்கோயில் நகர மையத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோயிலில் உயரமான முருகன் சிலை அமைக்க வேண்டும் என்ற ஈரோடு மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை முதல்வா் கவனத்துக்கு அமைச்சா் சு.முத்துசாமி கொண்டு சென்ன் அடிப்படையில், இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில் வேலாயுதசுவாமி திருக்கோயிலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் 180 அடி உயர முருகன் சிலை மற்றும் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் மலைப்பாதைக்கு செல்வதற்கு புதிதாக படி வழிப்பாதை அமைக்கப்படும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திண்டல் வேலாயுதசுவாமி திருக்கோயிலில் அன்னதானத் திட்டத்தில் தினமும் 50 நபா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தா்கள் அதிக அளவில் வருவதை கருத்தில்கொண்டு செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை, அமாவாசை நாள்கள், மாத சஷ்டி மற்றும் கிருத்திகை நாள்களில் 200 பக்தா்களுக்கும், கந்த சஷ்டித் திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் 500 பக்தா்களுக்கும் விரிவுபடுத்தி அன்னதானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இது பக்தா்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.