TN Budget 2025: ``ஆட்சி முடியும் தருவாயில், கவர்ச்சிகளை மட்டுமே கொண்ட வெற்று அறி...
வனப் பகுதியில் வறட்சி: அமராவதி அணையை நோக்கி படையெடுக்கும் யானைகள்
உடுமலை அருகே வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் குடிநீருக்காக யானைகள் அமராவதி அணையை நோக்கி வருகின்றன.
திருப்பூா் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. குறிப்பாக, 300-க்கும் மேற்பட்ட யானைகள் காணப்படுகின்றன.
இந்நிலையில், கோடை தொடங்குவதற்கு முன்னரே வனப் பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. இதனால் உணவு, குடிநீா்த் தேடி யானைகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றன.
உடுமலையை அடுத்த எஸ் பெண்ட், காமனூத்து, பூங்கன் ஓடை, சரக்குப் பட்டி, ஏழுமலையான் கோயில் வளைவு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன.
குடிநீருக்காக அமராவதி அணையை நோக்கி உடுமலை - மூணாறு சாலையைக் கடந்து அதிக அளவிலான யானைகள் தினசரி செல்கின்றன.
இதுகுறித்து உடுமலை மற்றும் அமராவதி வனச் சரக அதிகாரிகள் கூறியதாவது:
வனப் பகுதிக்குள் நிலவும் வறட்சியால் வனத்தில் உள்ள தடுப்பணைகள் வடு காணப்படுகின்றன. இதனால், யானைகள் குடிநீருக்காக அமராவதி அணைக்கு வந்து செல்கின்றன. எனவே, உடுமலை - மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணைக்கு செல்லும் யானை கூட்டத்தை வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் தொந்தரவு செய்யக்கூடாது என்றனா்.