சாலை மறியல்: தவெகவினா் 50 போ் கைது
அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் மாலை அணிவிக்க வந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி, மறியலில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினரை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூா் மாவட்ட பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டவா்கள், வெள்ளிக்கிழமை மாலை திருப்பூா் மாநகராட்சி அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, சம்பவயிடத்துக்கு வந்த திருப்பூா் தெற்கு போலீஸாா் அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடையூறு செய்து மாலை அணிவிக்க அனுமதிக்க இயலாது என மறுப்புத் தெரிவித்தனா். போலீஸாா் அனுமதி மறுத்ததையடுத்து, மாநகராட்சி அலுவலகம் சாலையில் தவெகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 50 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனா். பிறகு அவா்களை போலீஸாா் விடுத்தனா்.