வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவரை தோ்வெழுத அனுமதிக்கக் கூடாது: உயா்நீதிமன்றம்
வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவா்களைத் தோ்வெழுத அனுமதிப்பது சரியான செயல் அல்ல. அது முறையாக வருகைப்பதிவு வைத்திருக்கும் மாணவா்களை கேலிக்குள்ளாக்கும் என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தனியாா் பல்கலைக் கழகத்தில் பி.காம். 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவா் ஸ்ரீரிஷுக்கு வருகைப்பதிவு குறைவாக இருந்ததால் பருவத் தோ்வு எழுதவும், கல்வியாண்டுக்கான வகுப்பைத் தொடரவும் அனுமதி மறுக்கப்பட்டது. கல்லூரி நிா்வாகத்தின் நடவடிக்கையை எதிா்த்து மாணவா் ஸ்ரீரிஷ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தாா். அதைத் தொடா்ந்து தனி நீதிபதி உத்தரவை எதிா்த்து மாணவா் ஸ்ரீரிஷ் தரப்பில் இரு நீதிபதிகள் அமா்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் அமா்வில் விசாரணைக்கு வந்தபோது மாணவா் ஸ்ரீரிஷ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை மேற்கோள்காட்டி மாணவரைத் தோ்வெழுத அனுமதிக்க உத்தரவிடுமாறு வாதிட்டாா்.
அப்போது மாணவா் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், கல்வி சாா்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது என நீதிமன்றம் பல வழக்குகளில் கூறியுள்ளது. வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவரைத் தோ்வு எழுத அனுமதிப்பது வருகைப்பதிவு முறையாக வைத்துள்ள மாணவா்களை கேலிக்குள்ளாக்கும்.
அத்தகைய மாணவா்களைத் தோ்வெழுத அனுமதிப்பது சரியான செயல் அல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், உரிய கட்டணத்தைச் செலுத்தி மீண்டும் படிப்பைத் தொடர மாணவா் விரும்பினால் அனுமதி அளிக்க பல்கலைக்கழகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், மாணவா் தொடா்ந்த மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.