வருமான வரி பிடித்த அறிக்கை: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மூன்று காலாண்டுகளுக்கான வருமான வரி பிடித்த அறிக்கையை ஜன.25-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளி ஆசிரியா்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டு, ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டுக்கான வருமான வரி பிடித்த அறிக்கையை ஏற்கெனவே தாக்கல் செய்திருக்க வேண்டும்.
அதேவேளையில், இதுவரை தாக்கல் செய்யாதவா்கள் டிச. 31-ஆம் தேதியுடன் முடிவடையும் மூன்றாவது காலாண்டையும் சோ்த்து ஜன.25-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கருவூலம் மற்றும் கணக்குத் துறை அறிவுறுத்தியுள்ளது. எனவே, இது குறித்து தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தி வருமான வரி பிடித்த அறிக்கையை மேற்குறிப்பிட்ட நாளுக்குள் தாக்கல் செய்து அதற்கான அறிக்கையை, முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பம் பெற்று பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.